Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » வியாசர்
வியாசர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 அக்
2013
03:10

வியாசரை பரமாத்மா ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரம் என்பர். பதினெட்டு புராணங்களையும் ஐந்தாவது வேதமான மகாபாரதத்தையும் எழுதியவர். வேதத்திற்கே வியாசம் எழுதி வேதவியாசர் என்று கீர்த்தி பெற்றவர். ஸ்ரீமத் பாகவதம் என்ற அமுதத்தை அருளியவர். வேத வியாசர் பதினெட்டு புராணங்களிலும், ஒவ்வொரு தெய்வத்தை பெரிதென்று கூறுகிறார். பிரும்ம புராணத்தில் பிரும்மம் தான் பெரியது என்றும்; விஷ்ணு புராணத்தில் விஷ்ணுவைக் காட்டிலும் பெரியவர் இல்லையென்றும்; கந்தபுராணத்தில் கந்தன்தான் பெரியவன் என்றும்; தேவி பாகவதத்தில் தேவிதான் எல்லாராலும் பூஜிக்கத் தகுந்தவள் என்றும்; சிவ புராணத்தில் சிவபெருமான்தான் அனைத்திலும் உயர்ந்தவர் என்றும்- இப்படி ஒவ்வொரு புராணத்திலும் எந்தக் கடவுளை முன்வைத்து எழுதுகிறாரோ அந்தக் கடவுளை மற்ற தெய்வங்கள் பூஜித்து வணங்குவதாக எழுதுகிறார். ஆனால் பிரும்மாண்ட புராணத்தில், தெய்வங்களுக்குள் வித்தியாசம் கிடையாது; எல்லாமே ஒன்றுதான் என்று எழுதி முடித்தார்.

அனைத்தையும் எழுதி முடித்த வியாசர் இறுதியில் பூதவுடலை உகுத்து விண்ணுலகம் செல்ல விரும்பினார். காசிக்குச்சென்று கங்கையில் முழங்கால் அளவு நீரில் நின்று அபராதக்ஷ மாயாசனம் (தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோருதல்) செய்து விட்டு, நாராயணனைக் காட்டிலும் வேறு பெரிய தெய்வத்தை நான் அறியவில்லை என்று கூறினார். அந்த நேரத்தில் நந்திகேஸ்வரர் கங்கையில் நீராட வந்திருந்தார். சரீரம் விடப்பட வேண்டிய நேரத்தில் வியாசர் சொன்னது நந்தி பகவானுக்குக் கேட்க, வியாசனே, ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு தெய்வத்தைப் பெரிதாகக் கூறினாய். முடிவில் பிரும்மாண்ட புராணத்தில் எல்லாமே ஒன்றுதான் என்று தெரிவித்தாய். தற்சமயம் நாராயணனே பெரியவர் என்று சொல்லிக் குழப்புகிறாய். சிவ ÷க்ஷத்திரத்தில், சிவ பக்தனான நான் அருகில் நின்று கொண்டிருக்கும் போதே சொன்னதை மாற்றிச் சொல்கிறாய். எனவே அபராதக்ஷ மாயாசனம் செய்வதற்காக தூக்கப்பட்ட உனது கைகளும், நீரில் அழுந்திய கால்களும் துண்டிக்கப்படட்டும் என்று நந்திகேஸ்வரர் சாபம் கொடுத்தார்.

இதைக் கேட்டு சிரித்த வியாசர், நந்தி பகவானே, நான் சரீரத்தை விடும் நேரம் நெருங்கிவிட்டது. காசியில் இறந்தால் முக்தி. எனவே நான் நேராக முக்தி அடைந்துவிடுவேன். உமது சாபம் பலிக்காது என்று கூறினார். அதற்கு நந்தி வியாசனே, நீ மீண்டும் ஒரு பிறவி எடுக்கப்போகிறாய், அப்போது நான் கொடுத்த சாபம் பலிக்கும் என்றார். நந்தியே, காசியில் இறந்தால் மறுபிறவியில்லை என்பதை நீ அறியவில்லையா? என்று கேட்டார் வியாசர். வியாசனே, காசியில் இயற்கையாக இறப்பவருக்குதான் முக்தி. தானாக உயிரை விடுபவருக்கு முக்தி கிட்டாது என்றார் நந்தி. வியாசர் சற்று அதிர்ச்சியடைந்து, நந்தியின் கால்களில் விழுந்து, என்னை மன்னித்து சாபவிமோசனம் தர வேண்டும் என்று வேண்டினார். சிவ பக்தனான நந்தி கொடுத்த சாபம் பலித்தே தீரும். உனது கை, கால்கள் துண்டிக்கப்பட்டு நீ துன்பப்படும் வேளையில், அந்த பரமேஸ்வரனே உனக்கு தரிசனம் தந்து, இழந்த கை, கால்களை மீண்டும் அருளுவார் என்று அருளினார் நந்தி.

வியாசரும் மனம் தெளிந்து, கங்கையில் தனது சரீரத்தை விட்டுவிட்டு சொர்க்கம் சென்றார். அங்கே தேவேந்திரனும், மற்ற தேவர்களும் பூரண கும்பத்துடன் வியாசரை வரவேற்றார்கள் . பதினெட்டு புராணங்களை இயற்றி, பல தத்துவங்களை போதித்த என்னையன்றி இப்படிப்பட்ட வரவேற்பு வேறு யாருக்குக் கிட்டும்? என்னைப் போன்ற புராண கர்த்தா எவருமே இல்லை என்ற ஆணவத்தோடு சென்றார் வியாசர். தேவேந்திரன் ஒரு ஆசனத்தைக் காட்டி அமரச் சொன்னான். அந்த ஆசனத்தைக் கண்டதும் வியாசர் அதிர்ச்சியடைந்தார். காரணம், முள்ளால் நிரப்பப்பட்ட ஒரு ஆசனம் அது. வியாசர் கோபமுற்று, தேவேந்திரா, என்ன இது? நான் எழுதிய புராணங்களைப் படித்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்கள் எல்லாருமே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் எழுதிய எனக்கு இப்படி ஒரு ஆசனமா? என்றார்.

அந்த சமயம் பரம்பொருளான நாராயணர் அங்கே தோன்றினார். வியாசா, நீ சொன்னது எல்லாம் உண்மையே! நான் எழுதிய புராணங்களைப் படித்தவர்கள், கேட்டவர்கள், அனுபவித்தவர்கள் எல்லாரும் உயர்ந்த இடத்தைப் பெறட்டும் என்று எழுதியிருந்தாய். அவர்கள் உனது புராணங்களைப் படித்து, கேட்டு, அனுபவித்து பக்திப்பரவசம் கொண்டனர். ஆனால் நீ எழுதினாயே தவிர அதை அனுபவிக்கவில்லை. நான்தான் எழுதினேன் என்ற அகங்காரமும் கொண்டாய். அதனால் நீ இன்னொரு பிறவி எடுத்து அனுபவித்துவிட்டு வா. உனக்கு உயர்ந்த பதவி கிட்டும். நந்தியின் சாபமும் நிறைவேற வேண்டும் என்று கூறி மறைந்தார். அதன்படியே, தினமும் அக்னி ஹோத்ரம் செய்யும் நாராயண சாஸ்திரி என்ற அந்தணருக்கும், கமலா என்ற அம்மைக்கும் பூரி ஜெகன்னாதரின் அருளால், ஒடிஸ்ஸா மாநிலத்தில் அவதரித்தார் வியாசர். சிறு வயதிலேயே தெய்வ பக்தி நிரம்பியவராகவும் ஆசாரசீலராகவும் இருந்தார். தெய்வாம்சம் பொருந்திய குழந்தையாக இருந்ததால் ஜெயதேவர் என்ற நாமம் சூட்டினார்கள். தக்க வயது வந்தவுடன், கிருஷ்ண பக்தியில் திளைத்திருந்த பத்மாவதி என்ற பெண்ணை அவருக்கு மணம் முடித்தனர். எப்போதும் ஸ்ரீகிருஷ்ணனைப் பாடிக்கொண்டும் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டும் தம்பதிகள் இறையின்பத்திலேயே இருந்தனர். ஜெயதேவர் எல்லா தெய்வங்கள்மீதும் பேதமில்லாமல் பாடல்கள் இயற்றினார். ருத்ர கிரந்தம் என்ற நூலை எழுதினார். ராகவகிரந்தம் என்ற நூலையும் இயற்றினார். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீகிருஷ்ணனிடம் எல்லையில்லாத பிரேமை கொண்டு, 18 புராணங்களையும் இணைத்து கீதகோவிந்தம் என்ற  மகாகாவியத்தை எழுதினார்.

ஜெயதேவரின் மகிமைகளை அறிந்த பகவன்தாஸ் என்ற மன்னர், சில நாட்கள் ஜெயதேவரை தன் அரண்மனையில் வைத்து உபசரித்து, அவரக்கு ஆடை, ஆபரணங்கள், பொன், பொருள், எல்லாம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். ஜெயதேவர் ஒரு கானகத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, நான்கு திருடர்கள் அவரை சுற்றி வளைத்தனர். ஜெயதேவரின் கை, கால்களை வெட்டி ஒரு கிணற்றில் தள்ளிவிட்டு, அவர்வசமிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த சமயம் காட்டில் வேட்டையாட வந்த மன்னன் (கிரவுஞ்சன்) ஜெயதேவர் கிணற்றில் இருப்பதைக் கண்டு, மெள்ள அவரை மேலே தூக்கி முதலுதவிகள்  செய்து, பின்னர் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பராமரித்து வந்தான். ஜெயதேவரின் இனிய குரலையும், அவரது பக்தியையும் கண்ட கிரவுஞ்ச மன்னன் சுவாமிகளிடம் அன்பைப் பொழிந்தான். அஷ்டபதி பாடுவதும், பாகவத பிரவசனமும் சுவாமிகள் மூலம் கிடைத்தன. ஜெயதேவர் ஒரு பாகவதமேளா நடத்த வேண்டுமென்று மன்னரிடம் கேட்டார். அதன்படி மன்னன் நகரிலுள்ள பாகவதர்கள் அனைவரையும் அழைத்து சிறப்பாக பாகவத மேளா நடத்தினான். அந்த பாகவத மேளாவுக்கு, முன்பு ஜெயதேவரை கிணற்றில் தள்ளிய கள்வர்கள் நால்வரும் பாகவதர்கள்போல வேடம் பூண்டு வந்திருந்தார்கள். அரண்மனையில் சுவாமிகளைக் கண்டவுடன் இவன் திருடன், திருடன் என்றனர்.

கள்வர்கள் சுவாமிகளைப் பற்றி அபாண்டமான பதிலைச் சொன்னதும் பூமி வெடிக்க, அந்த நால்வரும் அந்த பள்ளத்தில் விழுந்தனர். இதைக் கண்ட ஜெயதேவர் கள்வராக இருந்தாலும் பாகவதர்களாக சில நாட்கள் இருந்தார்களே என்றெண்ணி, பாகவத அபசாரம் என்று சுவாமிகளும் அந்தப் பள்ளத்தில் விழுந்தார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கிரவுஞ்ச மன்னனும், தான் குருவாக நினைத்து வழிபட்ட சுவாமிகளே விழுந்துவிட்டாரே என்று தானும் பள்ளத்தில் குதித்தான். அப்பொழுது அகிலாண்டேஸ்வரனான பரமேஸ்வரன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சுவாமிகளையும், மன்னனையும் காப்பாற்றியருளினார். வியாசரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்ற மகா காவியத்தை எழுதி கிருஷ்ணன் அருளைப் பெற்றார். இது தேவரகசியம் என்றும்; ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நாபாஜி சித்தருக்கு இந்த வரலாற்றைக் கூறினார் என்றும் சொல்லப்படுகிறது. யாராக இருந்தாலும் தான் என்ற அகங்காரம் இருந்தால் அதற்கான தீவினையை அனுபவித்தே தீரவேண்டும் என்பதே நியதி.  பெரிய மகான்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரணமான மானிடர்கள் எப்படி இருக்கவேண்டும். எத்தனை இருந்தாலும் அகம்பாவம் நம்மை அண்டவே கூடாது!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar