பதிவு செய்த நாள்
08
நவ
2013
10:11
தூத்துக்குடி: திருச்செந்தூரில் இன்று மாலை 4.35 மணிக்கு சூர சம்ஹாரம் நடக்கிறது. எட்டு லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள். இன்று (நவ.8) அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 2 மணிக்கு உதய மார்தாண்ட அபிஷேகம், மற்ற கால வேளை பூஜைகள் தொடர்ந்து நடக்கும். காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை துவக்கம். 7 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளுவார். பகல் 12 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜை. 12.45 மணிக்கு யாகசாலையில் ஜெயந்திநாதர் எழுந்தருளல், பின் தங்க சப்பரத்தில் ஜெயந்தி நாதர் எழுந்தருள்வார். மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம், ஆராதனை. சூரசம்ஹாரம் கடற்கரையில் மாலை 4.30 மணிக்கு ஜெயந்திநாதர் எழுந்தருளுவார். 4.35 சூர சம்ஹார நிகழ்ச்சி துவங்கும். கஜமுகா சூரன், சிங்கமுக சூரன், சூர பத்மன்வேடங்களில் வரும் சூரனை சுவாமி வதம் செய்யும் காட்சிகள் நடக்கும். சூரனை சேவல், மாமரமாக சுவாமி தனக்குள் ஆட்கொள்ளுவார். சந்தோஷ மண்டபத்தில் ஜெயந்திநாதர், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனை நடக்கும். பின் கிரி வலம் வந்து கோயில் சேர்தல். சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளுவார்.108 மகாதேவர் கோயில் முன் சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடக்கும். திருக்கல்யாணம் நவ.,9 இரவு 12 மணிக்கு சுவாமிக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கும். நவ.,10 ல் குமரவிடங்க பெருமாள் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை பூப்பல்லக்கிலும் பட்டின பிரேவேசம், பின் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். நவ., 11முதல் 12 வரை குமரவிடங்க பெருமாள், தெய்வானையுடன் ஊஞ்சல் காட்சி நடக்கும். நவ., 14 ல் மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, சுவாமி அம்பாளுடன் திரு வீதி வலம் வந்து கோயில் சேர்தல் நடக்கும். பாதுகாப்பு தமிழகம் முழுவதிலுருந்தும் எட்டு லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதால், பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அனைத்து பகுதியில் இருந்தும் 100 க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிறது. சூர சம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு களிக்க நாழி கிணறு, வேலன் விடுதி பகுதியில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. திருச்செந்தூர் நகருக்குள் பஸ்கள், கார்கள் அனுமதிக்கப்படமாட்டாது.