பதிவு செய்த நாள்
11
நவ
2013
11:11
அரியலூர்: அரியலூர் பெரிய கடைவீதியில், ஸ்ரீ பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. குழந்தை இல்லாத தம்பதியர்க்கு புத்திர பாக்கியம் வழங்கும் வல்லமை கொண்ட பாலசுப்ரமணிய ஸ்வாமி என, பக்தர்களால் போற்றப்படும், இக்கோவிலின் கந்த சஷ்டி மகோற்சவ பெருவிழா, கடந்த, 3ம் தேதி துவங்கியது. நாள்தோறும் ஆட்டுகிடா வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், ரிஷப வாகனம், வெள்ளி மயில் வாகனம் என, பல்வேறு வாகனங்களில் முருக பெருமான் திருவீதி உலாவும், 8ம் தேதி இரவு சூரசம்ஹார விழாவும் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து, 9ம் தேதி, நேற்று முன்தினம் இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய ஸ்வாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பாலசுப்ரமணியன் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் பலரும், பக்தி சிரத்தையுடன் நடத்திய இத்திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமான பெண்கள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.