கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக கழுகுமலையில் அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் தமிழகத்தில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இக்கோயிலில் முருகனின் ஒவ்வொரு சிறப்பு திருவிழாக்களும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் கந்தசஷ்டி திருவிழாவும், அதையொட்டி நடைபெறும் தாருகாசூரன் வதம், சூரசம்ஹாரம் ஆகிய விழா நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமானவை. இந்தாண்டு கந்தசஷ்டி திருவிழா நடந்த 3ந்தேதி துவங்கி ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர் முறையில் சுவாமி வள்ளி தெய்வானை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் திருவீதியுலா வந்தனர். இதையடுத்து கடந்த ஐந்தாம் திருநாளன்று தமிழகத்தின் முருகத்தலங்களில் எங்குமே நடைபெறாத சிறப்பாக தாருகாசூரன் வதம் நடந்தது. இதையடுத்த ஆறாம் திருநாளன்று சூரசம்ஹாரமும், ஏழாம் திருநாளன்று திருவீதியுலா வந்து தடம்பார்த்தல் நிகழ்ச்சியும், எட்டாம் திருநாளன்று தபசுக்காட்சியும் நடந்தது. கந்தசஷ்டி திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான முருகன் தெய்வானை திருக்கல்யாண திருவிழா நடந்தது. இதையொட்டி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து உற்சவர் கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், உச்சிகால பூஜையும் நடந்தது. பின்னர் மாலையில் நடைதிறக்கப்பட்டு சுவாமி மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் திருவீதியுலா வந்த பின்னர் மண்டபத்தில் எழுந்தருளினார். மேலும் தெய்வானை மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு திருமண மேடைக்கு எழுந்தருளல் நடந்ததுடன், திருமண நலங்கு பூஜைகள் நடந்தது. பின்னர் நூற்றுக்கணக்கான முருக பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணைமுட்டதெய்வானைக்கு சுவாமி திருநாண் பூட்டி திருக்கல்யாணம் நடந்தது. மேலும் சுவாமி மற்றும் தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திருக்கல்யாண சிறப்பாக பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் போன்ற மங்கலப்பொருகள் பிரசாதமாக வழங்கப்பட்ட பின்னர் திருமொய்யெழுதும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் கழுகுமலை பழனிச்சாமி சின்னத்தாயம்மாள் சார்பில் சுவாமி திருக்கல்யாண பொதுவிருந்து நடந்தது. விழாவில் கட்டளைதாரர் திருமாளிகை ஆதீனம் அனந்தம்மன் கோயில் செல்லச்சாமி, கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.