முன் நூற்பா முத்தி நிலை பற்றிக் கூறியது. அம்முத்தி நிலையை இவ்வுலகில் இவ்வுடம்போடு கூடியுள்ள போதே பெற்றிருப்பவரைச் சீவன் முத்தர் என்று குறிப்பிடுவர் தமிழில் அணைந்தோர் என்பர்.
அவர் உலக நினைவின்றிச் சிவத்தில் அழுந்திச் சிவானந்தத்தில் திளைத்திருப்பர். இந்நிலையைத் தூங்காமல் தூங்குதல் என நூல்கள் குறிப்பிடும். தம்மையும் உலகையும் மறந்திருத்தலால் தூங்குதலும், சிவத்தை உணர்ந்து நிற்றலால் விழித்திருத்தலும் ஆகிய இரு நிலைமையும் ஒருங்கு நிகழ்தலை இவ்வாறு உணர்த்துவர்.
பிராரத்த வினை காரணமாக இன்பம் வரினும் துன்பம் வரினும் சீவன் முத்தர் தாமரையிலையில் நீர்போலச் சிறிதும் பற்றின்றி ஒரு தன்மையராய் இருப்பர். இறைவன் திருவடியை எப்பொழுதும் பிரியாது நிற்றலால் அவர்க்கு எந்நாளும் இன்பமேயன்றித் துன்பமில்லை.
அவர்களது அறிவும் இச்சையும் செயலும் இறைவனிடத்தேயே அழுந்தியிருக்கும். அவை உலக முகப் பட்டுப்புறத்தே செல்லும் பொழுதெல்லாம் அவர்கள் திருக்கோயிலுக்குச் சென்று வணங்குதல். மெய்யடியார்களோடு கூடி இறைவனது புகழைப்பேசி இன்புறுதல் முதலியவற்றையே செய்வர்.
இவ்வணைந்தோர் இயல்பையே இந்நூற்பா எடுத்துரைக்கிறது.
நூற்பா
செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ மால்அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே
ஆசிரியர் கூறும் கருத்துரை:
என்பது சூத்திரம். என் நுதலிற்றோ எனின், அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
கருத்துரையின் பொருள்
சிந்தனைக்கு எட்டாதவனாய்-அசிந்திதனாய்-நிற்கும் இயல்பினையுடைய இறைவனைச் சிந்தனையுள் அகப்படும்படியாகக் கண்டு அவனை வழிபடும் முறையை உணர்த்துதல் இந்நூற்பாவின் கருத்தாகும்.
கருத்துரை விளக்கம்: இறைவன் சிந்தனைக்கு அப்பாற்பட்டவன் என்பதால் அவனை மாயா காரியங்களாகிய கருவி கரணங்களைக் கொண்டு அறிதல் இயலாது என்பது விளங்கும். கருவிகளோடு கூடியே அறிந்து வருகின்ற உலகர் அவனைக் காணமாட்டார். கருவிகளினின்றும் நீங்கி முத்தரே அவனைக் காணல் இயலும். அவ்வாறு கருவிகளின் நீங்கி அவனைக் கண்டோர் பின்பு கருவிகளோடு கூடி நின்று உலகத்தோடு தொடர்புற்ற காலத்திலு<ம் அவனைக் காணுதல் கூடும். ஆகவே அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகவும் கண்டு வழிபடுதல் சீவன் முத்தர்க்கே உரிய இயல்பாதல் புலனாகும்.
நூற்பாவின் பொருள்
சிவத்தை அணைந்த சீவன்முத்தன் செந்தாமரை மலர்போல விளங்குகின்ற அம்முதல்வனது திருவடியில் அணைந்து நிற்க ஒட்டாது விலகும்படி செய்வனவாகிய மும்மலங்கள் என்னும் அழுக்கை ஞானம் என்னும் நீரால் கழுவி நீக்குவான்.
தன்னைப்போல அயரா அன்பினையுடைய மெய்யடியார்களோடு கூடியிருந்து அவர்களது திருவேடத்தையும், திருக்கோயிலில் உள்ள திருமேனிகளையும் சிவன் எனவே தெளிந்து அவற்றை வழிபட்டு வாழ்வான்.
பதவுரை: (அரன்கழல் அணைந்த சீவன் முத்தன்)
செம்மலர் நோன்தாள் -செந்தாமரை மலர் போல விரிந்து விளங்குகின்ற முதல்வனது திருவடியிடத்தே சேரல் ஒட்டா -நிலைத்திருக்க ஒட்டாது, உலகின்பால் செலுத்துவனவாகிய அம் மலம் கழீஇ -அந்த மும்மலங்களாகிய அழுக்கினை ஞான நீரால் கழுவி, அன்பரொடு மரீஇ -தன்னைப்போன்ற அடியவரோடு பொருந்தி மால் அற நேயம் மலிந்தவர் வேடமும்- மயக்கம் நீங்கினமையால் அன்பு மிக உடைய அவர்களது திருவேடத்தையும் ஆலயம் தானும் -திருக்கோயிலில் உள்ள திருவுருவங்களையும் அரன் எனத் தொழுமே -சிவன் எனவே தெளிந்து வழிபட்டு வாழ்வான்.
சிறப்புரை: கழீஇ, மரீஇ, தொழும் என்னும் பயனிலைகளுக்கு எழுவாய் சீவன் முத்தன் என்பது, அது முந்திய நூற்பாவிலிருந்து வருவிக்கப்பட்டது.
நோன் தாள்- சுமக்கின்ற திருவடி நோன்றல்- சுமத்தல்
திருவருளுக்கு ஆளான அன்பர்கள் எந்நிலைமையிலும் இறைவனையே உணர்ந்து நிற்பர். வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனது திருவடியை விடுவேன் அல்லேன் என்ற உறுதியோடு இருப்பர். கண நேரமும் இறைவனை உள்ளத்தில் பிரியாமல் அவனையே விடாது பற்றிக்கொண்ட அன்பர்களின் நிலையைக் குழந்தையின் நிலையோடு ஒப்பிடலாம்.
தாயின் காலைப் பற்றிக்கொண்டு வாழும் குழந்தைக்கு என்ன கவலை? அதனைச் சுமந்து கொண்டு அதற்கு வேண்டியவற்றையெல்லாம் தாய் செய்கிறாள். அதுபோல, இறைவனது திருவடியைப் பற்றிக் கொண்ட அன்பர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. இறைவன் அவரை எவ்விடத்தும் தாங்கிக் காப்பான். அவரைத் தன்மேல் வைத்துச் சுமந்து செல்லும் துணைவனாய் இருப்பான். அடியவராகிய சுமையைச் சுமத்தல் பற்றியே அவனது திருவடியை நோன் தாள் என்றார் ஆசிரியர்.
கழீஇ என்ற சொல்லினால், மும்மலம் உயிருக்கு அழுக்கு என்பது விளங்கியது அதனைக் கழுவுகிற நீர் ஞானம் என்று கொள்ளப்பட்டது. ஞானமாவது முதல்வனை மறவாமையேயாகும்.
ஆலயம் என்பது ஆகுபெயராய், திருக்கோயிலினுள் இருக்கும் திருவுருவங்களைக் குறித்தது.
தொழும் என்பதற்கு வழிபடுவான் என்று பொருள். எனவே அச்சொல் உயர்திணை ஆண்பால் படர்க்கை வினைமுற்று ஆகும். தொழுவான் என்று கூறியதனால், இது சீவன் முத்தரிடத்து இயல்பாக நிகழ்வது என்று கூறியதாயிற்று. எனவே இந்நூற்பா அணைந்தோர் தன்மை கூறுவது என்பது விளங்கும்.
விளக்கம்:
அறிவு இச்சை செயல்கள் புறத்தே செல்லுதல்: சீவன் முத்தர்க்கு உடம்பு நிற்கின்ற வரையில் அவரது அறிவும் இச்சையும் செயலும் புறத்தே செல்ல நேரும். அவரது அறிவு புறத்தே செல்லுங்கால் மும்மலங்களாகிய அழுக்குத் தம் உணர்வைப் பற்றி நில்லாதபடி அவற்றை நீக்குதற்கண் செல்லும். அவரது இச்சை புறத்தே செல்லுங்கால் செய்யன்பர்களுடன் கூடிப் பழகுவதில் செல்லும். அவரது செயல் புறத்தே செல்லுங்கால் அடியவர் திருவேடத்தையும் ஆலயத்தில் உள்ள திருவுருவத்தையும் சிவன் எனவே கண்டு வழிபடும் செயலாகவே நிகழும்.
எனவே, அவரது அறிவு இச்சை செயல்கள் பிராரத்த வினை காரணமாக உலக முகப்படும்பொழுது இவ்வாறு செயற்படுமேயன்றி உலகப் பொருள்களிடத்தே செல்லா என்பது அறியத்தகும்.
ஞான நீரால் கழுவுதல்: உடம்பு உள்ளவரையில் பிராரத்தம் விளையும் ஆதலின் அதனால் விருப்பு வெறுப்புக்கள் தோன்றும். அவ்விருப்பு வெறுப்புக்களால் இஃது உறவுப்பொருள், இது பகைப்பொருள் என்று உலகை நோக்குகிற நிலை உண்டாகும். அதுபற்றி, யான் எனது என்னும் தற்போதம் எழுவதாகும். இம்முறையில் மும்மலங்களும் உயிரைத் தம் வழியில் இழுத்துக் கீழ் நெறியிற் செலுத்தும். இவை வரும் முறையைச் சிந்தித்துணர்ந்து இவை வராதபடி தம் உணர்வைத் தூய்மை செய்து கொள்ளுதலே ஞானநீரால் கழுவுதல் ஆகும்.
இயல்பாயும் சாதனமாயும் அமைதல்: பால் உணவை உண்ணுதல் செல்வர் வாழ்வில் இயல்பாய் நிகழ்வது. இயல்பாய் அமைந்த அவ்வுணவு அவருக்கு நோய் வாராது உடல் நலம் காக்கும் மருந்தாகவும் அமைகிறது. அதுபோல, அன்பரோடு சேர்ந்திருத்தலும் அன்பர் வேடத்தையும் சிவாலயத்தையும் வழிபட்டுக் கொண்டிருத்தலும் ஆகியவை சீவன்முத்தர்க்கு இயல்பாய் நிகழும் செயல்களாகும். அவையே அவர்க்கு மலவாசனையை நீக்கிச் சிவானந்தத்தை மிகுவிக்கும் சாதனமாகவும் அமைகின்றன. அக்கருத்தோடு தொழும் என்பதை நோக்குதல் வேண்டும்.
ஆசிரியர் கருதிய பொருள் தொழுவான் என்பதேயாகும். எனவே இது சீவன் முத்தர்பால் இயல்பாக நிகழ்வது என்பது விளங்கும். ஆயினும் அச்செயல் முன் சொல்லியவாறு ஓரு பெரும் பயனை அவர்க்குத் தருகின்ற சாதனமாகவும் நிற்றலால் தொழுக என்று விதியாகவும் கொண்டு பொருள் கூறலாம். வார்த்திக உரையினும் விதியாகவே வைத்துக் கூறப்பட்டுள்ளமை காணலாம்.
இந்நூற்பாவின் பொருள் நிலை நான்கு கூறுகளாக வைத்து ஆராயப்படுகிறது. அக்கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு.
கூறு பொருள் முதல்கூறு -மும்மலங்களைக் கழுவுதல் இரண்டாம்கூறு -அடியார் இணக்கம் மூன்றாம் கூறு -அடியவர் திருவேடத்தையும் ஆலயத்தையும் வழிபடுதல் நான்காம் கூறு -குரு லிங்க சங்கம வழிபாடு
முதற்கூறு சிவத்தை அணைந்த சீவன்முத்தர் முதற்கண் இன்றியமையாது செய்தற்குரியதனை இங்கு உணர்த்துகிறார்.
மேற்கோள் ஈண்டு, ஆணவம் மாயை கான்மியம் என்னும் மலங்களைக் களைக என்றது
மேற்கோள் விளக்கம்: இதன்பொருள் வெளிப்படையாக உள்ளது. பத்தாம் நூற்பாவில் மலம் மாயை தன்னொடு வல்வினை இன்றே எனப் பாசநீக்கம் கூறி முடித்தமையால் பாசம் நீங்கி நிட்டை கூடிய நிலையில் அம்மூன்றையும் மீளக்களைக எனக் கூறுதல் ஏன்? என்னும் ஐயம் எழலாம். அதனைப்பின்வரும் ஏதுவால் நீக்குகின்றார்.
ஏது விளக்கம்: நிட்டை கூடிய நிலையில் ஆணவம் மாயை கன்மம் என்பன வலியடங்கி மடங்கி நிற்குமேயன்றி அறவே கெட்டொழியவில்லை ஆகையால் அவை ஓரொரு சமயத்தில் எவ்வகையிலேனும் நிட்டை கூடியவராகிய சீவன் முத்தரிடத்தில் வந்து நுழையும். அவை ஞானம் நிகழ்வதற்கு ஏதுவாகாமல் விபரீத ஞானம் நிகழ்வதற்கே ஏதுவாய் நிற்கும். அது பற்றியே சீவன்முத்தர் அவை நுழையாதவாறு களைதல் வேண்டும் என மேற்கோள் கொண்டார்.
எடுத்துக்காட்டு
மலம் மாயை கன்மங்கள் அஞ்ஞானத்திற்கு ஏதுவாய்ச் சீவன் முத்தரிடத்தில் எவ்வகையில் நுழையும் என்பதை இங்கு எடுத்துக்காட்டுகின்றார்.
வெண்பா
74. புண்ணிய பாவம் பொருந்தும் இக் கான்மியமும் மண்முதல் மாயை காண் மாயையும் கண்ணிய அஞ்ஞானம் காட்டும் இவ்வாணவமும் இம்மூன்றும் மெய்ஞ்ஞானிக்கு ஆகா; விடு
இதன் பொருள்:
மும்மலங்கள் நுழையும் முறை:
முன்பு செய்த புண்ணிய பாவங்களின் பயனாயும், இனிமேல் சேரப்போகின்ற புண்ணிய பாவங்களுக்குக் காரணமாயும் நிற்பது பிராரத்த வினை. சீவன் முத்தர்க்கு உடம்பு உள்ள வரையில் அது முகந்து கொண்ட பிராரத்த வினை வாசனை மாத்திரமாய் நின்று அவரது உணர்வைத்தாக்கும். அதனால் எங்கும் சிவமாகக் காணுகின்ற அக்காட்சி சிறிது மறைந்து மாயையின் காரியமாகிய உலகம் காட்சிப்படும்.
உலகம் காட்சிப்பட்ட பொழுது, எல்லாம் அவனே என்னும் மெய்யுணர்வு மறைந்து யான் என்னும் பிறர் என்றும் எண்ணும் தற்போதம் தோன்றும். அத் தன்முனைப்பினால் நல்ல வகையிலோ தீய வகையிலோ அமையும் முயற்சி தோன்றும். அம்முயற்சி பிராரத்த வினையை நுகர்வதற்குத் துணையாய் நிற்கும்.அந்நுகர்ச்சியில் அடுத்த பிறப்பிற்கு வித்தாகிய ஆகாமிய வினை தோன்றும். அந்நிலை மீண்டும் பிறப்பிற் செலுத்திவிடும்.
இவ்வாறு அஞ்ஞானத்திற்கு ஏதுவாய் மும்மலங்களும் சமயம் வாய்க்கும் பொழுது நுழைந்து கேடு விளைவிக்கும் ஆதலால் அவை தோன்றும் பொழுதே களைந்து விடுதல் வேண்டும்.
பதவுரை
புண்ணிய பாவம் -இன்பமாயும், துன்பமாயும் பொருந்தும் -வந்து பொருந்துகின்ற இக் கான்மியமும் -இவ்வியல்பினை உடைய பிராரத்த கன்மமும் மண் முதல் மாயை காண் மாயையும் -நிலம் முதல் மாயா தத்துவம் ஈறாகக் காணப்படுகின்ற முப்பத்தொரு தத்துவங்களாகிய மாயா மலமும் கண்ணி அஞ்ஞானம் காட்டும் இவ் ஆணவமும் -திரிபுணர்வைத் தருதற்கு எழும் ஆணவ மலமும் இம் மூன்றும் -ஆகிய இம்மும்மலங்களுமே மெய்ஞ்ஞானிக்கு ஆகா -மெய்யுணர்வைப் பெற்ற உனக்கு ஏலாவாம். (ஆதலால்) விடு -அவை தோன்றும் பொழுதே விரைந்து களைவாயாக.
விளக்கம்:
மும்மலங்களும் இவ்வாறு புகுந்து சிவானந்தப் பெருவாழ்வை இழக்கச் செய்யும் ஆகலான் அவை மெய்ஞ்ஞானிக்கு ஆகா என்றார் அவை முதலில் சமயம் பார்த்துச் சிறிதே நுழைந்து பின் மெல்ல மெல்ல வலிமை பெற்று வளர்ந்து முறுகும். ஆதலால் அதற்கு இடங்கொடாமல் முளையிலேயே கிள்ளியெறிதல் வேண்டும் என்பாராய் மேற்கோளில் களைக என்றார்; இங்கும் விடு என்று வலியுறுத்தினார்.
சிவஞானத்துள் அடங்கி நிற்றல்: ஆணவ மலத்தின் காரியமாகிய யான் எனது என்னும் தற்போதவுணர்வும், அதன் வழியாக வரும் விருப்பு வெறுப்புக்களும், புலன் உணர்வுகளும் தலையெடுக்குமாயின் அவை எழாதவாறு அறிவினால் அடக்கித் தம் அறிவிற்கு முதலாய் உள்ள சிவனது ஞானத்திற்கு உள்ளாக அடங்கி நிற்றல் வேண்டும்.
ஆமை தான் வாழும் நீரிலிருந்து வெளிப்பட்டு நிலத்தில் நடக்கும்பொழுது தனக்குத் தீங்கு வருவதாக உணர்ந்தால் அப்பொழுதே நான்கு கால்களும் தலையும் ஆகிய ஐந்து உறுப்புக்களையும் விரைந்து சுருக்கி ஓட்டினுள் அடங்கிக் கிடக்கும். அதுபோலச் சிவனை அணைந்தோர் உலகில் வாழுங்கால் மும்மலங்களின் வாசனை தாக்குவதாக உணரின் சிவ ஞானத்துள்ளே ஒடுங்கி நிற்றல் வேண்டும். அவ்வாறு நிற்றலே மும்மலங்களை விட்டொழிக்கும் முறையாகும்.
இரண்டாம் கூறு: மும்மலங்கள் முனைத்துத் தோன்றும் பொழுது ஞானநிலையில் நெகிழாது உறைத்து நின்று அவற்றை நீக்குதல் வேண்டும் என்பதை முதற்கூறில் உணர்த்தினார். அதன் பின்னர்ச் செய்தற்குரியதனை இவ்விரண்டாம் கூறில் உரைக்கின்றார்,
மேற்கோள்:
இனிச் சிவ பத்தர்களோடு இணங்குக என்றது
மேற்கோளின் பொருள்:
சிவ பத்தராவார் பத்தியினால் மறவாது ஏத்தி முதல்வனது சீ பாதத்தை அணைந்தோர். தன்னை யொத்தவராகிய அவரோடு சீவன் முத்தன் நட்புக்கொள்க. இவ்வாறு ஆசிரியர் கூறியதனால் சிவபத்தர் அல்லாத ஏனையாரோடு நட்புச் செய்யற்க என்பதும் சொல்லாமலே பெறப்பட்டது. பிறரோடு ஏன் நட்புச் செய்தல் கூடாது என்பதற்கான காரணத்தைப் பின்வரும் ஏதுவில் குறிப்பிடுகின்றார்.
ஏது:
அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவர் ஆகலான்
ஏது விளக்கம்:
அல்லாதார் செயல்:
நாம் பழகுகின்ற அனைவருமே நல்லவர் என்று சொல்வதற்கில்லை. சிலர் உள்ளத்தால் தீமையை மேற்கொண்டு ஒழுகுவார்கள். ஆனால் வெளியில் நமக்கு நன்மையே செய்வார் போலக் காட்சியளிப்பார்கள். திருக்கோயிலுக்குச் சென்று வரலாம் என்று எண்ணினால் அவர்கள் தம் செலவில் கேளிக்கை நடக்கும் இடத்திற்கு வருந்தி அழைத்துச் செல்வார்கள். இளமையும் செல்வமும் எப்பொழுதுமா இருக்கப் போகின்றன. இப்பொழுதே அனுபவித்தால் தான் உண்டு. கடவுளைப் பற்றி எண்ணுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கடவுளுணர்ச்சியை நெகிழச் செய்து விடுவார்கள்.
நடையை மெய்யென்று நாத்திகம் பேசித் திருவருள் உணர்வை மறக்கச் செய்யும் இவர்களையே அல்லாதார் என ஏதுவில் குறிப்பிட்டார். அவர்கள் சமயம் வாய்க்காவிடினும் எவ்வகையிலேனும் வாய்ப்பினை உண்டாக்கிக் கொண்டு அஞ்ஞானத்தையே அறிவு என்று உணர்த்தி நிற்பர். ஆதலால் அவர்களை அஞ்சத்தக்கவர்களாகக் கொண்டு அவர்களோடு இணங்குதலை விட்டொழிதலே ஞானியருக்கத் தக்கது.
அங்ஙனமாயின் அல்லாதாரை விட்டு விலகினாலே போதும். சிவபத்தரோடு இணங்கியிருத்தல் வேண்டும் என்பது எதற்கு? என்று வினவலாம். அதற்குரிய விடையை எடுத்துக் காட்டில் கூறுகின்றார்.
இறைவன் எக்காலத்திலும் தம்மோடு அத்துவிதமாய் உடனிருந்து காட்டியும் கண்டும் உதவி வரும் பெருங் கருணையை இடைவிடாது நினைந்துருகி நிற்பவர் சீவன் முத்தர் அந்நிலையே ஞான நிலை; ஞானக் கண்ணைப் பெற்ற நிலை. கண்ணுடையோர் குழியில் வீழாது விலகி நடப்பர். ஞானக் கண்ணை உடையோரும் பிறவியாகிய குழியில் வீழாது விலகிச் செல்வர்.
சிவபத்தரல்லாதார் சீவன்முத்தரது இந்நிலையை மாற்றித் திருவருளை மறக்கும்படி செய்வர். அவரது ஞானக்கண்ணை இழக்கச் செய்து பிறவியாகிய குழியிலே விழும்படி செய்வர்.
இப்படிப்பட்ட ஞானமில்லாத உலகரோடு பழக்கம் பிராரத்த வினை காரணமாக உண்டாவது அந்தத் தொடர்பு சிவபக்தர் கூட்டத்தோடு எப்போதும் இணங்கியிருந்தாலன்றி நீங்காது. சிவபத்தர் ஞானக்கண்ணை நன்கு விளங்கச்செய்வர்.
அத்தகைய சிவ பத்தரிடத்தே பேரன்பு உடையவராய்த் தமது மனம் மொழி மெய் மூன்றும் அவர் வழியே செல்ல நிற்பாராயின் உலகியல் உணர்வு நீங்கும். சிவவுணர்வே மேம்பட்டு நிகழும். அதனால், உடம்பைப் பற்றி நிற்கும் பிராரத்த வினைகள் அவரைத் தாக்கமாட்டா. அதனால் ஞானமில்லாத உலகரிடத்து அன்பு செல்லாது. அவர்களோடு உள்ள தொடர்பு பற்றறக் கழியும்.
எனவே, சிறப்பில்லார் தொடர்பு அறுதற் பொருட்டுச் சிவபத்தர்களோடு கூடியிருத்தல் இன்றியமையாதது என்பதை உணரலாம்.
பதவுரை
தம்மை மறப்பித்து -இறைவன் உடன் இருந்து செய்துவரும் உதவியை மறவாது நினையும் தமது நிலையை மாற்றி மறக்கும் படி செய்து மலங்களின் வீழ்க்கும் -மும்மலங்களான் ஆய பிறவியாகிய படுகுழியில் தம்மை வீழ்த்துகின்ற, சிறப்பில்லார் தம்திறத்துச் சேர்வை -இறைவனிடத்தும் இறையடியாரிடத்தும் அன்பில்லாதவரோடு பழகி வந்த சேர்க்கை அற -நீங்குதற் பொருட்டு பத்தர் இனத்துப் பித்தாய் -சிவபக்தர் கூட்டத்தின் மேல் பேரன்பு பூண்டு பரன் உணர்வினால் -(அவரால் வலிமை பெறுகின்ற) சிவஞானத்தால் உணரும் -எதனையும் உணர்கின்ற மெய்த் தவரை -உண்மைத் தவம் உடையவரை வினைமேவா -பிராரத்த வினைகள் வந்து பற்றமாட்டா (முதற்கண் தோன்றுவதாகிய பிராரத்தம் தோன்றாது ஒழியுமாயின் ஏனைய மாயையும், ஆணவமும் தோன்றுதல் இல்லையாம்)
மூன்றாம் கூறு:
சிவபத்தராகிய அடியார் நடுவுள் இருக்கும்அருளைப் பெற்ற சீவன் முத்தர் அதன் பின்பு அந்நட்பை நிலைநிறுத்தற் பொருட்டுச் செய்தற்குரியதனை இம்மூன்றாம் கூறில் உரைக்கின்றார்.
மேற்கோள்:
இனி பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரன் எனவே கண்டு வழிபடுக என்றது.
மேற்கோளின் பொருள்
சிவன் எனவே காணப்படுபவர் சிவ பத்தர். அவரது திருவேடத்தையும் திருக்கோயிலுள் இருக்கும் திருவுருவையும் சிவனது எனவே கண்டு வழிபடுக என்பது பொருள்.
மேற்கோள் விளக்கம்:
திருநாவுக்கரசர் திருவேடப் பொலிவு:
பத்தர் திருவேடம் எவ்வாறு இருக்கும் என்பதைத் திருநாவுக்கரசரது திருவேடத்தின் இயல்பு கொண்டு உணரலாம். பொன் வண்ண மேனி; அம்மேனியில் தூய வெண்ணீறு மார்பில் தாழ்வடம் அன்பு நீர் பொழியும் கண்கள் திருப்பதிகம் பாடும் செவ்வாய்; நாயகன் சேவடி மறவாத சிந்தை; கந்தையும் மிகை என்னும் கருத்து; கையில் உழவாரப்படை இத்தகைய திருவேடப் பொலிவோடு திருநாவுக்கரசர் திகழ்ந்தார் எனப் பெரிய புராணம் எழுதிக் காட்டும்.
சேரமான் பெருமாள் வாழ்வில்:
சேரமான் பெருமாள் என்ற அரசர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியொன்று திருவேடத்தின் சிறப்பினை எடுத்துக் காட்டுவதாய் அமைகிறது. அவர் பட்டத்து யானை மீது வரும்போது உவர் மண்ணைச் சுமந்து மழையில் நனைந்த வண்ணான் ஒருவன் எதிரில் வந்தான். உவர்மண் படிந்த அவனது உருவம் முழு நீறு பூசிய முனிவர் தோற்றம் போல விளங்கியது. சேரமான் பெருமாள் அவ்வுருவைச் சிவன் எனவே கண்டார் அக்கணமே யானையின் மேலிருந்து இறங்கி அவனை அடிதொழுதார். அவன் அஞ்சி ஆர் எனக் கருதிற்கு என்னை? அடியேன் அடிவண்ணான் என்றான். அப்போதும் அம்மன்னர்பிரான் நிலையாத அரச வாழ்வைப் பற்றி எண்ணாமல் மெய்யுணர்வு நிலையில் நின்று பின்வருமாறு கூறினார். அடியேன் அடிச்சேரன் திருநீற்று வாரவேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என்று சொல்லிப் பிரிந்தார்.
மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள் என்பதைக் கடைப்பிடியாகக் கொண்டு வாழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரின் வரலாறும் இங்கு நினையத் தகும்,
இனி, இம்மேற்கோள்பற்றி ஓர் ஐயம் எழலாம். எல்லாவற்றையும் சிவமாகக் காணுதலே சிவஞானியர்க்கு இயல்பு. அவ்வாறிருக்க, திருவேடத்தையும் சிவாலயத்தையும் மட்டுமே பரமேசுரன் எனக் கண்டு வழிபடுக என்று கூறியது பொருந்துமோ? என்பதே அவ்ஐயம். அதனை நீக்கி மேற்கோளை நிறுவுதற்கு ஏதுக் கூறுகின்றார்.
ஏது:
அவன் மற்று இவ்விடங்களில் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்
ஏதுவின் பொருள்
இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்பினும் தன் அடியாரிடத்திலும், திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனியிலும் மட்டுமே அவன் தயிரில் நெய் போல இனிது விளங்கி நிற்கின்றான். மற்ற இடங்களில் எல்லாம் அவன் பாலில் நெய்போல விளங்காது நிற்பான். ஆதலால் இவ்விரண்டு இடங்களில் மட்டுமே வழிபடுக எனக் கூறப்பட்டது.
இவ் ஏதுவின் பொருளை விளக்கிக் காட்டுதற்கு எடுத்துக் காட்டுச் செய்யுட்கள் கூறுகின்றார்.
எடுத்துக்காட்டு 1
அடியாரிடத்தில் இறைவன் தயிரில் நெய்போல இனிது விளங்கி நிற்கும் முறையினைக் கூறுகின்றார்.
வெண்பா
76. தன் உணர வேண்டித் தனது உருவைத் தான்கொடுத்துத் தன் உணரத் தன்னுள் இருத்தலால் தன் உணரும் நேசத்தர் தம்பால் நிகழும் ததிநெய்போல் பாசத்தார்க்கு இன்றாம் பதி
இதன்பொருள்:
அடியாரிடத்தில் விளங்கி நிற்றல்:
மனம் மொழி மெய்களைக் கடந்து நிற்பவனாகிய இறைவன் உலகத்தார் தன்னை உணர்ந்து வழிபடுதற் பொருட்டுத்தன் வடிவாகிய திருநீறு, கண்டிகை முதலியவற்றைத் தன்னடியார்க்குக் கொடுத்துள்ளான்.
அவ்வடியார்கள் சிவோகம் பாவனையால் அவனை உணர்ந்தவர்கள், தன்னை உள்ளவாறு உணர்ந்த அவரைத் தனது வியாபகத்துள் அடக்கிக் கொண்டு அவரைத் தானாக்கிக் கொள்கின்றான். (உலைத்தீ தன்னைச் சேர்ந்த இரும்பைத் தன்னுள் அடக்கித் தானாக்கிக் கொள்வது போன்றது இது) இவ்வகையில் அவ்வடியார் சிவனேயாவார். அவர்களிடத்தில் இறைவன் தயிரில் நெய்போல விளங்கி நிற்பான் பாசம் நீங்காத ஏனையோரிடத்தில் விளங்காதே நிற்பான்.
ஆதலால் நேயம் மலிந்தவர் வேடத்தை அரன் எனக்கண்டு தொழுக என்கின்றார்.
பதவுரை:
பதி -உயிர்களால் உணர்வதற்கு அரியவனாகிய இறைவன் தன் உணர வேண்டி -அவ் வுயிர்கள் தன்னை உணர்ந்து உய்தற் பொருட்டு தனது உருவை -திருநீறு, கண்டிகை முதலிய தனது திருக்கோலத்தை தான் கொடுத்து -தனது அன்பர்க்குக் கொடுத்து தன் உணர -அவர் சிவோகம் பாவனையால் தன்னை இடை விடாது உணர்ந்து நிற்பாராக தன்னுள் இருத்தலால் -அந்நிலையில் உள்ள அவரைத் தனது பெருநிறைவினுள் அடக்கிக் கொள்ளுதலால் தன் உணரும் நேசத்தார் தம்பால் -தன்னை உள்ளவாறு உணரும் அவ்வன்பரிடத்து ததி நெய்போல் நிகழும் -தயிரில் நெய்போல் விளங்கி நிற்பான் பாசத்தார்க்கு -அத்தன்மை யில்லாத ஏனைப் பாசப்பற்று உடையாரிடத்தில் இன்று ஆம் -(பாலில் நெய்போல்) விளங்காது நிற்பான்
எடுத்துக்காட்டு 2
அடியார்கள் சிவத்துவ விளக்கம் உடையவர்கள் என்பது பொருந்துகிறது. திருக்கோயிலின் உள்ளிருக்கும் திருவுருவம் சிவ விளக்கம் உடையது என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? என்ற வினவலாம். அதற்கு விடையாக இவ்வெடுத்துக் காட்டினைக் கூறுகின்றார்.
வெண்பா
77. கண்டதொரு மந்திரத்தால் காட்டத்தில் அங்கி வேறு உண்டல்போல் நின்றுஅங்கு உளதாமால் கண்ட உருத் தான் அதுவாய் அன்றானான் தான் அதுவாய்த் தோன்றானோ தான் அதுவாய்க் காணும் தவர்க்கு
இதன் பொருள்:
திருமேனிகளில் விளங்கி நிற்றல்:
ஞானமில்லார் திருக்கோயில் உள்ளிருக்கும் திருவுருவே முதல்வன் என்பதை உணரார். அத்திருவுருவில் வேறுபட்டு நிற்பவனாகவே இறைவனைக் கருதுவர். அவர்களுக்கு இறைவன் விறகில் தீப்போல அத்திருமேனிகளில் விளங்காது நிற்பான். ஆயினும் விறகிலுள்ள தீ கடைந்த பொழுது வேறு காணப்படுதல்போல, மந்திர வடிவமாக அத்திருமேனிகளைக் கண்டு வழிபடுங்காலத்தில் இறைவன் அத்திருமேனிகளில் விளங்கி நிற்பான். மந்திர வடிவாய்க்காணாத மற்ற நேரங்களில் அவன் அவற்றில் மறைந்து நிற்பான்.
சிவஞானியர் எல்லாப் பொருள்களிலும் இறைவன் அவையேயாய்க் கலந்து நிற்கின்ற அத்துவித நிலை பற்றி எல்லாவற்றையும் சிவமாகக் காண்பர். அம்முறையில் திருக்கோயிலுள் இருக்கின்ற திருமேனிகளையும் அவனாகவே கண்டு வழிபடுவர். அதனால் அவர்களுக்கு இறைவன் அத்திருமேனிகளில் மந்திரசாதகம் இல்லாமலே எக்காலத்திலும் விளங்கி நின்று அருள்புரிவான். ஆகையால் அடியவர்களிடத்தில் அவன் விளங்கி நிற்றல் போலவே திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனிகளிலும் சீவன் முத்தர்க்கு விளங்கியிருப்பான் என்பது தெளிவாகும்.
பதவுரை
கண்ட உருத்தான் அதுவாய் அன்றானான். திருக்கோயிலில் உள்ள திருவுருவத்தில் கலப்பினால் அதுவேயாய், பொருள் தன்மையால் அதனின் வேறாகின்ற இறைவன்
காட்டத்தில் அங்கி -விறகில் உள்ள நெருப்பு வேறு உண்டல் போல் -(கடையாத பொழுது வெளிப்படாது) கடைந்த பொழுது வெளிப்பட்டுத் தோன்றுதல் போல கண்ட தொரு மந்திரத்தால் -கிரியை யாளர்க்கு அவர் அறிந்த ஒரு மந்திரத்தின் வழியாக நின்று அங்கு உளதாம் -திருவுருவத்தில் விளங்கித் தோன்றுவான் (மந்திரம் இல்லாத பொழுது விளங்காது நிற்பான்) அது தானாய்க் காணும் தவர்க்கு -திருக்கோயிலில் உள்ள திருஉருவத்தையும் சிவமாகவே காணும் ஞானியர்க்கு (அவ்வாறன்றி) அது தானாய்த் தோன்றானோ - எப்பொழுதும் அத்திருவுருவே தானாய் விளங்கி நில்லானோ? (தயிரில் நெய் போல விளங்கியே நிற்பான்)
நான்காம் கூறு
முந்திர கூறுகளின் ஒழிபாக இப்பகுதி அமைகின்றது. இதில் இலிங்கம், சங்கமம், குரு என்னும் மூன்றினையும் சிவமாகவே கண்டு வழிபட வேண்டுதலின் இன்றியமையாமை வலியுறுத்தப்படுகின்றது.
மேற்கோள்:
இனி, இவ்விடங்களில் வழிபடுக என்றது
மேற்கோள் விளக்கம்:
மேற்கூறிய சிவபத்தரது திருவேடமும் சிவாலயமும் ஆகிய இரண்டுமே இவ்விடங்கள் எனப்பட்டன.
ஏது:
நரம்பு நாடி முதலானவற்றைத் தான் அதுவாய் வரும் புருடன் அவையாகாவாறு அப் புருடனும் ஆகலான்
ஏது விளக்கம்:
உடம்பில் உள்ள நரம்பு, நாடி முதலியவற்றில் உயிர் அது அதுவாய் வேற்றுமையின்றிக் கலந்து நிற்பினும் ஆராய்ந்து பார்க்கும் பொழுது உயிர் அந்நரம்பு முதலியன ஆகாது அவற்றின் வேறாயும் இருத்தல் புலனாகும். அது போல இறைவன் உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களிலும் அது அதுவாய் வேற்றுமையின்றிக் கலந்து நிற்பினும் பொருள் தன்மையால் அவை அல்லனாகியும் நிற்பான்.
இறைவன் அவையேயாய் நிற்கின்ற நிலையைக் கருதினால் சீவன் முத்தர்க்குச் சிவபத்தரது திருவேடமும் திருக்கோயிலுள் இருக்கும் திருமேனிகளும் சிவமாய்த் தோன்றித் தம்மை அவர் வழிபடும் படிசெய்யும். உண்மை நிலையில் சிவன் அவற்றின் வேறாய் நிற்பவன் என்பதை எண்ணுமிடத்து அவற்றை வழிபடும் நிலையைக் கைவிடத்தோன்றும். அவ்வாறு விடுதல் கூடாது. சீவன்முத்தர் இவ்விடங்களில் வழிபடுதல் வேண்டும்.
மேற்கோளில் இவ்விடங்களை வழிபடுக என்று கூறாமல் இவ்விடங்களில் வழிபடுக என்று கூறியதில் உள்ள குறிப்பினை நோக்குதல் வேண்டும். இவ்விடங்களை வழிபடுக என்றால் அவ்விடங்களே சிவன் என்றாகும். ஆயின் அவைதாமே சிவனல்ல. சிவனுக்கு அவை இடமாய் விளங்குவன. அவ்வாறு இடமாகக் கருதும்பொழுது அவற்றை வழிபடாமல் விடத்தோன்றும் அல்லவா? அப்பொழுதும் விடாமல் அவ்விடங்களில் அவனை வழிபடுதல் வேண்டும்.
ஏதுவில் உள்ள புருடன் இரண்டில் முன்னது உயிரைக் குறிக்கும். பின்னது முதல்வனைக் குறிக்கும்.
எடுத்துக்காட்டு 1
இறைவனைச் சிவலிங்க வடிவில் வழிபடுதலை வலியுறுத்தி முதல் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.
வெண்பா:
78. அது இது என்றது அது அல்லான்; கண்டார்க்கு அது இது என்றதையும் அல்லான்; பொது வதனில் அத்து வித மாதல் அகண்டமும் தைவமே அத்து விதி, அன்பின் தொழு.
இதன் பொருள்:
இலிங்க வழிபாடு:
முதல்வன் உலகத்தோடு அத்துவிதமாய் நிற்கும் நிலைமையை உணர்ந்தால். அதுவும் இதுவும் என வேறுபடுத்திச் சொல்லும்படியாக நிற்கும் பேத சம்பந்தம் மட்டுமே உடையவனல்லன்; அதுவே என்று ஒற்றுமைப்படுத்திச் சொல்லும் படியாக நிற்கும் அபேத சம்பந்தம் மட்டுமே உடையவன் அல்லன்; குண குணி போல அதுவாகிய இது என்று வேற்றுமைப் படுத்தியும் ஒற்றுமைப் படுத்தியும் சொல்லும் படியாக நிற்கும் பேதா பேத சம்பந்தம் மட்டுமே உடையவனும் அல்லன். அம்மூன்றற்கும் பொதுவாய் அவன் உலகத்தோடு பிரிப்பின்றி நிற்கின்றான். ஆதலால் எல்லாப் பொருளும் அவன் வடிவேயாகும்.
அத்துவித ஞானத்தைப் பெற்றுள்ள மாணவனே, பசுவின்பால் அதன் உடலில் பரவியுள்ளதேனும் அது வெளிப்பட்டு நிற்குமிடம் அதன் மடியேயாகும். அதுபோல, இறைவன் எல்லாப் பொருளையும் தன் வடிவாகக் கொண்டாலும் அவற்றில் அவன் வெளிப்பட்டு நில்லாமல் திருக்கோயிலுள் இருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனியில் அவன் விளங்கித் தோன்றி அருள் புரிவான். அத்திருமேனியே அன்பு விளையும் இடமாகும். சிவலிங்கத் திருமேனியில் செய்யும் வழிபாடே அத்துவித ஞானத்தை நிலைபெறச் செய்யும்.
பதவுரை
கண்டார்க்கு -இறைவன் உயிர்ப் பொருள் உயிரில்லாத பொருள் ஆகிய எல்லாவற்றோடும் தொடர்புற்று நிற்கும் நிலைமையை உணர்ந்தவர்க்கு அது இது என்றது அல்லான் -கண்ணொளியும் சூரியவொளியும் போல அதுவும் இதுவும் எனப் பொருள் தன்மையால் இரண்டாகச் சொல்லும்படி நிற்கும் பேத நிலைமையனும் அல்லன். அது என்றது அல்லான் -உடல், உயிர் போல் அதுவே எனக் கலப்பினால் ஒன்றாகச் சொல்லும்படி நிற்கும் அபேத நிலைமையனும் அல்லன்; அது இது என்றதும் அல்லான் -குணம் குணி போல் அதுவாகிய இது என ஒரு பொருளையே இரு தன்மைப்பட வைத்துச் சொல்லும் பேதாபேத நிலைமையனும் அல்லன். பொது அதனில் அத்துவிதம் ஆதல் -அம் மூன்று தன்மைக்கும் பொதுவாக அத்துவிதமாய் நிற்பவன் ஆதலால் அகண்டமும் தைவமே -எல்லாப் பொருள்களும் அவன் வடிவமே (ஆயினும்) அத்துவிதி -பொருள்களில் இறைவன் அத்துவிதமாய் நிற்றலை உணர்ந்த மாணவனே, அன்பின் -உனக்கு அன்பு விளையும் இடத்தில் தொழு -வழிபாட்டினைச் செய்வாயாக
விளக்கம்:
ஈற்றடியில் உள்ள அன்பு என்பது அன்பு விளையும் இடத்தைக் குறித்தது. அன்பு விளையும் இடமாவது திருக்கோயிலுள் இருக்கும் திருமேனியாகும்.
எடுத்துக்காட்டு 2
இனி மெய்யுணர்வு மேலோங்குவதற்குச் சிவபத்தரோடு கூடி அவரை வழிபடுதல் வேண்டும் என இங்கு உணர்த்துகிறார்.
வெண்பா
79. வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினைதீரின் அன்றி விளையா;-வினைதீர ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும் ஆனத்தால் அன்பின் தொழு.
இதன் பொருள்:
சங்கம வழிபாடு:
பிராரத்த வினை காரணமாகவே அசத்தாகிய உலகம் காட்சிப்படும் அதனால் சிவக்காட்சி மறையும். பிராரத்த வினை நீங்கினால் அன்றிச் சிவமே காட்சிப்படுகின்ற அத்துவித ஞானம் மேம்பட்டு நிகழாது. பிராரத்த வாசனை கழிதற் பொருட்டு மெய்ஞ்ஞானத்தை உடைய சிவபத்தரை நாடிச் சென்று அவரை வழிபட்டுவரின் மெய்ஞ்ஞானம் மறையாது நிலைபெற்று விளங்கும். ஆகையால், மாணவனே, நீ சிவபத்தரைத் தேடியடைந்து அவரை அன்போடு வழிபடுவாயாக.
பதவுரை
வினையால் -உடம்பைப் பற்றி நிற்கும் பிராரத்த வினை தலையெடுக்குமானால் அசத்து விளைதலால் -அசத்தாகிய மாயா காரியங்கள் காட்சிப்பட்டு மயக்குதலைச்செய்யும் ஆதலால் வினைதீரின் அன்றி -அந்த வினையின் தாக்குதல் ஒழிந்தாலன்றி ஞானம் விளையா -மாயா காரியங்களின் மயக்கு அகன்று சிவமே காட்சிப் படுகின்ற அத்துவித ஞானம் மேம்பட்டு நிகழாது.(அதனால்) வினை தீர -பிராரத்த வினையின் வாசனை நீங்குதற் பொருட்டு ஞானத்தை -மெய்ஞ்ஞானத்தை உடைய சிவபத்தரை நாடித் தொழவே -தேடி அடைந்து அவரை வழிபட்டாலே அது நிகழும் -பிராரத்த வினையின் வாசனை நீங்கி, மெய்ஞ்ஞானம் மேலோங்கி நிற்கும் ஆனத்தால் -ஆதலால்(மாணவனே) அன்பின் தொழு -மெய்யுணர்வை நிலைபெறச் செய்யும் அவ்வடியவரை அன்போடு வழிபடுவாயாக
விளக்கம்
மூன்றாம் அடியில் ஞானத்தை நாடி என்பதில் உள்ள ஞானம் ஞானத்தையுடைய சிவபத்தரைக் குறித்தது.
எடுத்துக்காட்டு 3
சிவ குருவைச் சிவமாகவே கண்டு வழிபட வேண்டியதன் இன்றியமையாமையினை இங்கு உணர்த்துகிறார்.
வெண்பா
80. தன்னை அறிவித்துக் தான்தானாச் செய்தானைப் பின்னை மறத்தல் பிழையலது-முன்னவனே தானேதா னாச்செய்தும் தைவம் என்றும் தைவமே; மானே தொழுகை வலி
இதன் பொருள்:
குரு வழிபாடு: இறைவன் தன்னை ஒரு சிறிதும் அறியமாட்டாது குருடாய்க் கிடந்த உயிருக்கு ஞானக் கண்ணைக் கொடுத்துத் தன்னை உணரும்படி செய்தான். எத்துணையும் அரிய பொருளாகிய அவன் எத்துணையும் எளிய அவ்வுயிரைத் தானாம் வண்ணம் செய்தருளினான். இறைவனது கைம்மாறு கருதாத உதவியை அவ்வுயிர் மறக்குமாயின் அது கழுவப்படுவதொரு குற்றம் அன்றாம்; கழுவாய் இல்லாத மிகப்பெருங்குற்றமாய் முடியும்.
இறைவன் அவ்வுயிரைத் தானாம் வண்ணம் செய்தானாயினும் அது சுதந்திரம் உடையதாகிவிடாது. அவனையின்றி அமையாது அவனுக்கு என்றும் அடிமையாகியே நிற்கும். ஆதலால் குருவாகி வந்து அங்ஙனம் செய்தருளிய அப்பெரியோனை வழிபடுதலே சிற்றுயிர்க்கு உறுதி தருவதாகும்.
ஈற்றடியில் உள்ள மான் என்பது மகான் என்ற வடசொல்லின் திரிபாகும். பெரியோன் என்பது பொருள்.
பதவுரை
தன்னை அறிவித்து -(இறைவன் குருவாகி வந்து, தன்னை ஒரு சிறிதும் அறியாது கிடந்த உயிருக்கு ஞானத்தைக் கொடுத்து) தன்னை உணரும்படி செய்து தான் -அவ்வுயிர் தானாச் செய்தானை -தானாகும் வண்ணம் செய்தருளினான் அப்படிப்பட்ட இறைவனது கைம்மாறு கருதாத உதவியை பின்னை மறத்தல் -அதனைப் பெற்ற பின்னர் மறத்தல் பிழை அலது -(முன்பு அறியாமையால் மறந்த குற்றம் போல) கழுவக் கூடிய குற்றம் அன்றாம். முன்னவனே -இறைவன் தானே முற்பட்டு வந்து தானே தானாச் செய்தும் -அவ்வுயிரைத் தானாகவே செய்தானாயினும் தைவம் -இறைவனுக்கு அடிமையாகிய உயிர் என்றும் தைவமே -என்றும் அடிமையே(அதனால்) மானே -பெரியோனாகிய இறைவனை தொழுகை -குருவாகக் கண்டு வழிபட்டு வாழ்வதே வலி -உயிருக்கு என்றும் வலிமை தருவதாகும்.
இந்நூலுக்கு உரியவர்
இவ்வாறு நூலை முடித்த பின்னர் இந்நூலைக் கொள்ளுதற்கு உரியார் இவர் என்பதை ஒரு வெண்பாவில் உணர்த்துகின்றார்.
வெண்பா
81. சிவமென்னும் அந்ததர, சிந்தைநேர் நோக்கப் பவம் இன்றாம் கண்வா சகத்தின்-சிவம் உண்டாம் ஒன்றும் இரண்டும் மலத்தார்க்கு; இங்கு ஒண்குருவால் இன்று இந்நூல் மும்மை மலர்க்கு
இதன் பொருள்:
சீவன் என்னும் தன்மை நீங்கிச் சிவமாம் தன்மையைப் பெற்றுநிற்கும் மாணவனே,
இறைவன் ஒரு மலம் உடைய விஞ்ஞானகலர்க்கு உள்நின்று அருள் நோக்கம் செய்வதாலு<ம், இருமலம் உடைய பிரளயாகலருக்கு முன்னர்த் தோன்றி திருநோக்கு, பரிசம், வாசகம் என்னும் தீக்கைகளைச் செய்வதாலு<ம் அவர்களுக்குப் பசுத்துவம் நீங்கிச் சிவத்துவம் விளங்கும். ஆகையால் அவ்விருவருக்கும் நூல் வேண்டுவதில்லை.
சிவம் என்னும் -சீவத் தன்மை நீங்கிச் சிவமாம் தன்மையை எய்தி நிற்கும் அந்த தர -சித்தாந்த மாணவனே ஒன்றும் இரண்டும் மலத்தார்க்கு -ஒரு மலமும் இருமலமும் உடைய விஞ்ஞான கலருக்கும், பிரளயா கலருக்கும் சிந்தை நேர் நோக்க -(முறையே) வெளிப்படாது அறிவினுள் இருந்தவாறே அருட்பார்வையால் நோக்குதலாலும் கண் வாசகத்தின் -(தனது இயற்கை வடிவில் முன்னர் தோன்றி) திருநோக்கு, பரிசம், வாசகம் என்னும் தீக்கைகளைச் செய்தலாலும் சிவம் உண்டாம் -சிவமாம் தன்மை உண்டாகும் பவம் இன்றாம் -பிறவி இல்லை யாகும் (ஆகவே அவர்களுக்க இந்நூல் வேண்டுவதில்லை) மும்மை மலர்க்கு -மும்மலங்களையுடைய சகலர்க்கே இன்று இந்நூல் -இன்று எம்மால் செய்யப்பட்ட இச் சிவஞான போத நூல்(பயன் தருவதாய்) இங்கு ஒண்குருவால் -இவ்வுலகத்தில் அனுபவமுடைய தேசிகர் வாயிலாகப் பெறுதற்கு உரியதாகும்.
விளக்கம்:
அந்தம்-வேதாந்தம்; தரம்-மேலானது, வேதாந்தத்தின் மேம்பட்டதாய் உள்ள சித்தாந்தம் அந்ததரம் எனப்பட்டது. அத்தகைய சித்தாந்தத்தை அனுபவமாகப் பெற்று நிற்கும் மாணவனை அந்த தர என அழைத்தார்.
எட்டாம் நூற்பாவின் இறுதி வெண்பாவிலும் அம்மாணவனை அந்ததர என்றே அழைத்தமை நினைவிருக்கலாம். அதற்கு அவ்விடத்திற்கு ஏற்ப வேறு பொருள் கூறப்பட்டது. இவ்விடத்தில் ஆசிரியர் உணர்த்திய இந்நூலால் சித்தாந்த ஞானத்தை அனுபவமாகப் பெற்று மலம் நீங்கிச் சிவமாம் தன்மை தன்னிடத்தில் விளங்க நிற்கின்றான் ஆதலின் அந்நிலைக்கேற்ப அவனைச் சிவம் என்னும் அந்ததர என அழைத்தது பொருத்தமேயன்றோ?
இதனால் இந்நூல் தன்னைக் கேட்டு உணர்ந்து ஒழுகுவாரைச் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
இந்நூலை அனுபவம் உடைய நல்லாசிரியரிடத்தில் கேட்கும் பொழுதுதான் அதன் உண்மைப்பொருள் உள்ளவாறு விளங்கும். அது கருதியே ஒண்குருவால் இன்று இந்நூல் என்றார் ஆசிரியர்