பதிவு செய்த நாள்
15
நவ
2013
10:11
திருப்புவனம்: சிவகங்கை, திருப்பு வனம் அருகே முதுவன்திடலில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, மொகரம் பண்டிகையில், இந்துக்கள் தீ மிதித்தனர்.முதுவன்திடலில், 400 க்கும் மேற்பட்டஇந்து குடும்பங்கள் உள்ளது. ஆரம்பத்தில், இங்கு முஸ்லிம்கள் அதிகளவில் இருந்தனர். நாளடைவில், நகரங்களை நோக்கி நகர்ந்ததால், அவர்கள் தொழுத "பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலில், இந்துக்கள் வழிபடுகின்றனர். இதற்காக, மொகரம் மாதம் முதல் நாளில் இருந்து 10 நாள் விரதம் இருக்கின்றனர். பிறை தெரிந்த மூன்றாம் நாளில், "பூக்குழி இறங்குவதற்கான நிகழ்ச்சிகள், காப்புக்கட்டுதலுடன் துவங்கும். ஏழாம் நாளில், அசேன், உசேன் உருவ சப்பரம் உலா வரும்.பத்தாம் நாளான, நேற்று அதிகாலை 4 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட ஆண்கள் (சிறுவர்கள்) தீ மிதித்தனர். பெண்கள் அதிகாலையில், ஈரத்துணியை உடல் முழுவதும் போர்த்தி, தீக்கங்குகளை எடுத்து, தலையில் போடும் "பூ மெழுகுதல் என்ற நேர்த்திக்கடன் செலுத்தினர். இங்கு திருநீர், சர்க்கரை பிரசாதமாக வழங்கப்படுகிறது.