சபரிமலையில் பக்தர்களுக்கான சேவைகள் ஆன்லைனில் படிப்படியாக மாற்ற முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2013 06:11
அறைகள் முன்பதிவு அறிமுகம்: சபரிமலையில் பக்தர்களுக்கான சேவைகள் படிப்படியாக ஆன்லைனில் கொண்டு வர தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. நடப்பு சீசனில் அறைகளில் ஒரு பகுதி ஆன்லைனில் புக்கிங் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. எல்லா துறை சேவைகளும் ஆன்லைனில் மாறிக்கொண்டிருக்கையில் சபரிமலை கோயில் சம்பந்தமான சேவைகள் மட்டும் ஆன்லைனில் வராமல் இருந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது. காட்டின் நடுவில் அமைந்துள்ள கோயில் என்பதால், பக்தர்கள் வந்து சேருவதில் உள்ள சிரமம், திடீர் என்று அதிகரிக்கும் கூட்டம் இப்படிப்பட்ட காரணங்களால் அறைகள் முன்பதிவு உள்ளிட்ட எந்த சேவையும் ஆன்லைனில் வரவில்லை. தற்போது படிப்படியாக அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் கொண்டுவர தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக அறைகள் முன்பதிவு ஆன்லைனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.travancoredevaswomboard.org மற்றும் www.sabarimalaaccommodation.org என்ற இணைய தளங்களில் சென்று அறைகள் முன்பதிவு செய்ய முடியும். இதற்கான கட்டணம் தனலெட்சுமி பேங்கின் தேவசம்போர்டு வங்கி கணக்கில் நெட் பேங்கிங் வழியாகவும், அல்லது புக்கிங் செய்யும் போது கிடைக்கும் செலான் மூலம் தனலெட்சுமி பேங்க் கிளைகளில் நேரடியாகவும் பணம் செலுத்தலாம். எனினும் இந்த ஆண்டு மொத்த அறைகள் எண்ணிக்கையில் 20 சதவீதம் அறைகள் மட்டுமே ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக பூஜைகளுக்கான முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல சபரிமலை அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அன்னதானத்துக்கு நன்கொடை கொடுக்க விரும்புவர்கள் தங்கள் பேங்க் எடிஎம் மற்றும் கிரெடிட் கார்டை கொடுத்து ஸ்கிராச் செய்து பணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.