பதிவு செய்த நாள்
18
நவ
2013
12:11
சபரிமலை: சபரிமலையை சுத்தமாக பாதுகாக்க புண்ணியம் பூங்காவனம் திட்டம் செயல்பட்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும், சபரிமலையில் கழிவுகளும் மலைபோல் குவிகிறது. பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகள், சபரிமலை காடுகளில் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து, குப்பைகளை அகற்றும் பணியில் பக்தர்கள், கோயில் ஊழியர்கள், போலீசார், அதிகாரிகள் அனைவரும் ஈடுபட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, புண்ணியம் பூங்காவனம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. தினமும், காலை 9 மணி முதல் பகல் 12 வரை, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு மண்டல காலத்தில் முதல் நாளில் நடந்த நிகழ்ச்சியில், தந்திரி கண்டரரு மகேஷ்வரரு குத்துவிளக்கேற்றினார். தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார், குப்பைகளை அள்ளி, திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை ஊழியர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். குப்பைகளை அகற்றுவதன் மூலம், ஐயப்பனின் பூங்காவனம் சுத்தமாக பராமரிக்கப்படுவதோடு, மிகச்சிறந்த ஐயப்ப சேவையாக இருக்கிறது என, இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.