பதிவு செய்த நாள்
21
நவ
2013
11:11
சபரிமலை: சபரிமலையில் பக்தர்களின் நட்சத்திரத்துக்கு உரிய மரங்களை அவர்கள் நன்கொடையில் நட்டு வளர்க்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக தனலெட்சுமி பேங்குடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளது. சபரிமலை இயற்கையை பாதுகாக்கும் வகையில் பிறந்தநாள் மரம் வளர்ப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் பக்தர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படஉள்ளது. இதன் படி 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அஸ்வதி- காஞ்சிரம், பரணி- நெல்லி, கார்த்திகை- அத்தி, ரோகிணி- நாவல், மிருகசீடம்- கருங்ஙாலி, திருவாதிரை- கரிமரம், புணர்தம்-மூங்கில், பூசம்- அரசு, ஆயில்யம்- நாகமரம், மகம்- ஆலமரம், பூரம்- பிளாசு , உத்திரம்- இத்தி, அத்தம்- அம்பழம், சித்திரை - கூவளம், சோதி- நீர்மருது, விசாகம்- விளா ,அனுஷம்- இலஞ்சி, கேட்டை- வெட்டி, மூலம்- பைன், பூராடம் -வஞ்சி, உத்திரம்-பலா, திருவோணம்- எருக்கு, அவிட்டம்- வாகினி, சதயம்- கடம்பு, பூரட்டாதி-மா, உத்திரட்டாதி- பனை, ரேவதி- இலுப்பை. இந்த நட்சத்திரத்துக்குரியர்வகள் மரம் நடுவதற்கு விரும்பினால் அதற்குரிய பணத்தை தனலெட்சுமி பேங்கில் செலுத்த வேண்டும். ஒரு மரம் நடுவதற்கு 3600 ரூபாய் செலுத்த வேண்டும். இதை மொத்தமாகவும், அல்லது இரண்டு ஆண்டுகளில் 1200 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாகவும் செலுத்தலாம். மூன்று ஆண்டுகள் அந்த மரம் அவர்கள் பெயரில் இருக்கும். அதன் பின்னர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டுக்கு சென்று விடும். மரத்தின் அருகில் பெயர் வைக்க வேணடும் என்று விரும்புவர்கள் பத்தாயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் 500 டாலர்கள் செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டு காலத்துக்குள் மரத்துக்கு ஏதாவது கேடு ஏற்பட்டால் புதிதாக மரம் நடப்படும். இது தொடர்பாக மேலும் விபரங்களை தனலெட்சுமி பேங்கின் www.birthstartree.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.