பதிவு செய்த நாள்
21
நவ
2013
11:11
உதயஸ்தாமன பூஜை 2021 வரை புக்கிங்: சபரிமலையில் படிபூஜை நடத்த விரும்பும் பக்தர்கள் இனி 15 ஆண்டுகள் காத்திருந்தால் மட்டுமே பூஜை நடத்த முடியும். இந்த பூஜைக்கு 2028 வரை முன்பதிவு முடிந்து விட்டது. சபரிமலையில் அதிக செலவு கூடியதும், அதிக பக்திபூர்வமானதுமான பூஜை படிபூஜை. சபரிமலையில் அமைந்துள்ள 18 படிகளும் ஒவ்வொரு மலைகளை குறிக்ககூடியதாகும். பொன்னம்பலமேடு, குண்டலிமாமலை, சுந்தரமாமலை, நாகர்மலை, இஞ்சிக்கோட்டை, கரிமலை, மயிலாடும்மாலை, சிற்றம்பலமலை, ஸ்ரீபாதமலை, புதுசேரிமலை, மதங்கமாமலை, கல்கிமகேஸ்வரமலை, நிலக்கல் சிவமலை, தலைப்பாறைமலை, தேவர்மலை, காளைகட்டிமலை, நீலிமலை, சபரிமலை என 18 மலைகளை இந்த படிகள் குறிக்கிறது. இந்த மலை தேவதைகளுக்காக நடத்தப்படும் பூஜைதான் படிபூஜை. 18 படிகளிலும் பட்டு விரித்து தேங்காய், பூ மற்றும் நிவேத்ய பொருட்கள் வைத்து தந்திரிகள் நடத்தும் பூஜைதான் படிபூஜை. சுமார் ஒரு மணி நேரம் இந்த பூஜை நடைபெறும். பூஜை நடைபெறும் போது இரண்டு மணி நேரம் வரை பக்தர்கள் படியேற முடியாது என்பதால் மண்டல மகரவிளக்கு காலத்தில் இந்த பூஜை நடைபெறுவதில்லை. மாதபூஜைகளின் போது இந்த பூஜை நடைபெறுகிறது. 2028 ஆகஸ்டு வரை இதற்கான முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் 15 ஆண்டுகள் காத்திருந்தால் மட்டுமே படிபூஜை நடத்த முடியும். படிபூஜைக்கான தற்போதைய கட்டணம் 40 ஆயிரம் ரூபாய். உதயாஸ்தமனபூஜை என்பது அதிகாலை நடை திறந்து நிர்மால்யதரிசனம் முதல் இரவு அத்தாழபூஜை வரை நடக்கும் 18 வகையான பூஜைகள்தான் உதயாஸ்தமனபூஜை. இதில் மதியம் கலசாபிஷேகமும் நடைபெறும். இதற்கான கட்டணம் 25 ஆயிரம் ரூபாய். இதற்கான முன்பதிவு 2021-ம் ஆண்டு வரை நிறைவு பெற்று விட்டது.