ரெகுநாதபுரம்: வல்லபை ஐயப்பன் கோயிலில் 10 லட்சம் ரூபாய் செலவில், நீராவி இயந்திர வசதியுடன் பக்தர்களுக்கான அன்னதான நவீன சமையல் கூடம் திறப்பு விழா நடந்தது. ரெகுநாதபுரம் வல்லபை நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதையொட்டி கோயில் வளாகத்தில் நீராவி அடுப்புடன் கூடிய நவீன சமையல் கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோயில் தலைமை குருக்கள் மோகன் தீபாராதனைக்கு பின் நீராவி இயந்திரத்தை துவக்கி வைத்தார். இணை செயலாளர் மதி, பொருளாளர் ராஜசேகர பாண்டியன் பங்கேற்றனர். தலைமை குருக்கள் மோகன் கூறியதாவது; பக்தர்களுக்கு உடனுக்குடன் உணவு வழங்கும் வகையில் நீராவி அடுப்பு பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 500 பேருக்கு 15 நிமிடத்தில் உணவு தயாரிக்க முடியும். மாவட்ட அளவில் கோயில்களில் உள்ள அன்னதான சமையல் கூடங்களில் ரெகுநாதபுரத்தில் தான் முதன் முறையாக நீராவி அடுப்பு பொருத்தப்பட்டுள்ளது. 2014ல், செப்டம்பரில் கோயில் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் படி பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.