பதிவு செய்த நாள்
27
நவ
2013
10:11
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் புதிய தேரை நிறுத்தி வைக்க, கொட்டகை அமைக்கப்படாததால், மழை, வெயிலால் தேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்புலிபுத்தார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், புதியதேர் செய்யும் பணி ரூ. 17 லட்சத்தில் 2005ல் துவங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உதவியுடன் 17 லட்சம் ரூபாய் செலவில் இக்கோயிலுக்கான திருத்தேர் செய்யும் பணி சமீபத்தில் முடிந்தது. புதிய தேர் 27 அடி உயரம், இரும்பு அச்சுக்கு மேல் ஐந்து அலங்கார அடுக்குகள் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மா அடுக்கான முதல் அடுக்கில், கதலிநரசிங்கப்பெருமாள், சிவன், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் சிற்பமும், கோண அடுக்கான 2ம் அடுக்கில் சிற்ப வேலைகளும், 3ம் அடுக்கில் பெருமாளின் அவதாரம், 4ம் அடுக்கில் தேவாசனம் மற்றும் ஆழ்வார் அவதாரம், 5ம் அடுக்கில் உற்சவர் அமரும் சிம்மாசன பீடம் மற்றும் தசாவதார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கு இரும்பு கரங்கள் தேரில் பொருத்தப்பட்டுள்ளன. பெயின்டிங் பணிகள் முடியும் முன்பே மார்ச் 29ல் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. வேலை முழுவதும் முடியாததால் கடந்த ஆண்டு சித்திரையில் தேரோட்டம் நடைபெறவில்லை.சமீபத்தில் திருத்தேரின் பெயின்டிங் வேலைகள் முழுமை அடைந்துள்ளன. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தேருக்கு கொட்டகை அமைக்காததால் மழை, வெயிலில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல லட்சங்கள் செலவு செய்து உருவாக்கப்பட்ட தேருக்கு, சில ஆயிரங்கள் செலவு செய்தால் பாதுகாக்க முடியும். அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.