பதிவு செய்த நாள்
30
நவ
2013
10:11
பவானி: பவானி, சித்தோடு பகுதியில் உள்ள இரண்டு ஈஸ்வரன் கோவில்களில், கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவில், கோடியர்ச்சனை மண்டபத்தில் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாவட்ட பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பவானி, ஊராட்சிக்கோட்டை மலைமீது அமைந்துள்ள வேதநாயகி உடனமர் வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 2001, ஜூலை, 2ம் தேதி நடந்தது. இங்கு கும்பாபிஷேகம் நடத்தி, 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அங்குள்ள கோபுர கலச விமான வேலைபாடுகள், பல்வேறு திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளவும், 5 நபர்கள் சேர்ந்து ஸ்தபதியர் மூலம் வரைபடம் பெற்று, பொறியாளர் மூலம் மதிப்பீடுகள் தயார் செய்து, அறநிலைய துறை விதிப்படி, தை மாதம் பாலஸ்தாபனம் செய்து, கும்பாபிஷேக பணிகள் துவங்க முடிவு செய்தனர். பவானி முன்னாள் எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியம், குழந்தைவேலு, நாச்சிமுத்து, ஜெயராமன், சுப்பிரமணியம், பவானி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் பூபதி மற்றும் சங்கமேஸ்வரர் கோவில் கிளார்க் முத்து உட்பட பலர் பங்கேற்றனர். பின், பவானி, சித்தோடு பாலதண்டாயுதபாணி கோவிலில் உள்ள சவுந்திரநாயகி சமேத நீலகண்டேஸ்வரர் சுவாமிக்கு புதிய விமானம் கட்டி, கும்பாபிஷேகம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.