ஊத்துக்குளி மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2013 12:12
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சைஊத்துக்குளியில் பிரசித்திபெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கையில் வஜ்ராயுதம் ஏந்தி நின்ற கோலத்தில் இருப்பது, இக்கோவிலின் சிறப்பு அம்சமாகும். எனவே இந்த கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கிறார்கள். இந்த கோவிலின் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் முதலாவது செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாரியம்மன் திருவீதிஉலா, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தது. தேரோட்டம்: கடந்த 1-ந் தேதி கிராமசாந்தியும, 2-ந் தேதி கொடியேற்றமும், 3-ந் தேதி மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் நட்டாற்றீஸ்வரன் கோவிலில் இருந்து காவிரித் தீர்த்தம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அக்னி சட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதையொட்டி மகாமாரியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.