பதிவு செய்த நாள்
10
டிச
2013
10:12
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே புளியமரத்தில் பால் வடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேப்ப மரத்தில் பால் வடிவது உண்டு. இது வயது முதிர்ந்த மரம் என்றால், இயற்கையாகவே பால் வரும் தன்மை உடையது. ஆனால் புளிய மரத்தில் பால் வடிந்ததால், அது அதிசயமாக பார்க்கப்படுகிறது. சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம், டவுன் பஞ்சாயத்து அலுவலக நுழைவு வாயிலில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளிய மரங்கள் வரிசையாக உள்ளது. இதில் வடக்கு பகுதியில், பவானி ஆறு வீதி சந்திப்பில் உள்ள புளியமரத்தின் நிழலில் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருப்பது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல், பல்வேறு பணிகளுக்கு செல்ல இந்த இடத்தில், பொதுமக்கள் பஸ்சுக்காக நின்றிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சொட்டு, சொட்டாக புளியமர கிளையில் இருந்து வெண்மை நிறத்தில் பால் வடிந்தது. இச்செய்தி பரவியதால் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து, பால் வடியும் புளியமரத்தை வந்து பார்த்து சென்றனர்.