பதிவு செய்த நாள்
10
டிச
2013
11:12
அனுப்பர்பாளையம்: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்கள் போதிய பராமரிப்பின்றி காய்ந்து வருகின்றன. திருமுருகன்பூண்டியில் புகழ்பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவிலையொட்டி, பேரூராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியில், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு மரம் உண்டு; அவ்வாறு 27 நட்சத்திரங்களுக்கும் மரங்கள் வளர்க்கப்பட்டன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவர்களுடைய நட்சத்திரத்துக்கு உரிய மரத்தை தரிசனம் செய்து செல்வர். பூங்காவுக்கு தேவையான தண்ணீர், கோவில் தீர்த்த கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்தினர். அந்த மோட்டார், ஐந்து மாதத்துக்கு மேலாக பழுதாகி பயன்பாடு இல்லாமல் உள்ளது.அதனால், பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை பிடித்து, பூங்காவில் உள்ள சிறு, சிறு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். போதிய அளவு தண்ணீர் ஊற்றாததாலும், பராமரிப்பு இல்லாததாலும், அங்குள்ள 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களில் 10 மரங்கள் காய்ந்து பட்டுபோய் விட்டன. தரிசிக்க வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மோட்டார் பழுதை சரி செய்து, பூங்காவையும், நட்சத்திரத்துக்கு உரிய மரங்களையும், பராமரிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.