பதிவு செய்த நாள்
14
டிச
2013
10:12
சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கின. மண்டல பூஜை நடத்துவதற்காக முகூர்த்த நேரத்தை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு அறிவித்தார். கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடக்கும்; இந்த பூஜைகளின் நிறைவு நாள், மண்டல பூஜை. அன்று, "களபம் (சந்தனக்கலவை) பவனியாக எடுத்து வரப்பட்டு, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பின், ஆரன்முளாவிலிருந்து வரும் தங்க அங்கி, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடக்கும். ""டிச., 26 காலை 11.55 முதல் மதியம் 1 மணிக்குள், மண்டல பூஜை நடக்கும், என, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு கூறினார். அன்று அதிகாலை 3.15 மணிக்கு தொடங்கும் நெய் அபிஷேகம், காலை 10.30 மணிக்கு நிறைவு செய்யப்படும்; தொடர்ந்து, ஸ்ரீகோயில் சுற்றுப்புறம் சுத்தப்படுத்தப்பட்டு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் "களப பூஜை நடக்கும். மதியம், மண்டலபூஜை முடிந்து, 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கும். தீபாராதனை, புஷ்பாபிஷேகத்துக்கு பின், இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். "மகரவிளக்கு காலத்திற்காக, டிச., 30 மாலை 5.30 மணிக்கு, நடைதிறக்கும்; அன்று, விசேஷ பூஜைகள் கிடையாது. டிச., 31 அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து, 4.15 மணிக்கு "மகரவிளக்கு கால நெய் அபிஷேகம் தொடங்கும்.