சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், அப்பம் வினியோகத்தில் கட்டுப்பாடு தொடர்கிறது. ஒருவருக்கு 10 பாக்கெட் அப்பம் வழங்கப்படுகிறது. சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அப்பம் மற்றும் அரவணை. அரவணை பக்தர்கள் தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. அப்பமும் தொடக்கத்தில் அவ்வாறு வழங்கப்பட்டது. கூட்டம் அதிகரித்த போது தேவைக்கேற்ப வழங்க முடியவில்லை. இதனால் ஒரு பக்தருக்கு அதிக பட்சமாக 30 பாக்கெட் அப்பம் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கியதால் ஸ்டாக் பெருமளவு குறைந்தது. இதை தொடர்ந்து ஒரு பக்தருக்கு ஐந்து பாக்கெட் மட்டும் வழங்கப்பட்டது. இதனால் தேவையான அப்பங்கள் வாங்க பக்தர்கள் மீண்டும் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. நேற்று ஒரு பக்தருக்கு 10 பாக்கெட்வீதம் வழங்கப்பட்டது. இதனால் மாளிகைப்புறம் அருகே உள்ள பிரசாத மண்டபத்தில் அப்பம் தயாரிக்க மேலும் பத்து அடுப்புகள் அமைக்கப்பட்டது. காஸ் மூலம் இதில் அப்பம் தயாரிக்கப்படும். தினசரி ஒரு லட்சம் பாக்கெட் என்பதற்கு பதிலாக, ஒரு லட்சத்து பத்தாயிரம் பாக்கெட் என உற்பத்தி அதிகரிக்கும். தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பாக்கெட்கள் தேவை என்ற நிலையில், 15 ஆயிரம் பாக்கெட்கள் பற்றாக்குறையாக உள்ளது. பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்தால் மட்டுமே, அப்பம் கட்டுப்பாட்டை நீக்க முடியும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.