பதிவு செய்த நாள்
14
டிச
2013
11:12
செங்கோட்டை: அச்சன்கோவில் அய்யப்பன் திருஆபரண பெட்டிக்கு நாளை (15ம் தேதி) தென்காசியில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐப்பசி மாதம் துவங்கி சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு ஐயப்ப பக்தர்கள் இருமுடிகட்டி சபரிமலை சென்று வருகின்றனர். தென்தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் பண்பொழி, மேக்கரை, தென்மலை, அச்சன்கோவில் வழியாக சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அச்சன்கோவிலுக்கு அதிகளவில் வந்து செல்வதையடுத்து ஆண்டுதோறும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் அச்சன்கோவில் ஐயப்பனுக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ஆபரணங்கள் இருந்து வருகின்றன. இவற்றை புனலூர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஆண்டுதோறும் அச்சன்கோவிலில் நடக்கும் ஐயப்ப உற்சவ விழாவையொட்டி திருஆபரணங்கள் அணிவது வழக்கம். இந்த ஆண்டு இத்திருவிழா துவங்கப்படவுள்ளதையடுத்து புனலூரில் இருந்து ஆபரணங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்படவுள்ளது. இந்த ஆபரண பெட்டிக்கு ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. நாளை (15ம் தேதி) திருஆபரண பெட்டி புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன் கொண்டுவரப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. வரவேற்பு கமிட்டி தலைவர் ஏ.ஜி.எஸ்.குருசாமிநாடார், செயலாளர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் தங்கவேல் ஆசாரி, துணைத்தலைவர் ஏஜிஎஸ் ஜி அரிகரன், துணை செயலாளர்கள் ஏ.ஜி.மணி, சுப்புராஜ், ஐயப்ப சேவா சங்க தலைவர் மாரிமுத்து, கவுரவ தலைவர் ராமன், ஐயப்ப சேவா சங்க செயலாளர் தங்கவேல் ஆசாரி, குருசாமிகள் திருமலைக்குமார சுவாமி, முருகன் குருசாமி, அழகிரி, தமிழ்சாமி, திருநாவுக்கரசு மற்றும் தென்காசி ஐயப்ப சேவா சங்க உறுப்பினர்கள் ஆபரண பெட்டி வரவேற்பு குழுவினர் செய்து வருகின்றனர்.ஆபரண பெட்டி வரவேற்பை தொடர்ந்து திருஆபரண பெட்டி பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் துவங்கும் அச்சன்கோவிலில் உற்சவ திருநாள் துவங்குவதை முன்னிட்டு திருஆபரண பெட்டி அலங்காரம் செய்யப்படுகிறது. அச்சன்கோவில் உற்சவ திருவிழாவை காண தமிழகம், கேரள மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருகை தருகின்றனர்.