பதிவு செய்த நாள்
17
டிச
2013
11:12
சென்னிமலை: காங்கேயம் அடுத்த சிவன்மலை சுப்ரமணியஸ்வாமி மலைக்கோவில் உள்ளது. இக்கோவிலை, தமிழக அரசு, சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது. இக்கோவில் தேரோட்டம் சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தேர் திருவிழா, ஜனவரி, 17, 18, 19ம் தேதி நடக்கிறது. இதில், 19ம் தேதி தேர் வடம் பிடித்தல் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். இதுகுறித்து, தாராபுரம் ஆர்.டி.ஓ., திவாகர் தலைமையில் ஆலோனை கூட்டம் நடந்தது. சிவன்மலை பஞ்சாயத்து சார்பில், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யவும், போலீஸார் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. தவிர சிறப்பு மருத்துவர்கள் குழு, அவசர கால ஊர்தி, தீயணைப்பு வாகனங்கள், அரசு சிறப்பு பஸ்கள் செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆர்.டி.ஓ., திவாகர் பேசியதாவது: தேர் வடம் பிடிக்க, சில லட்சம் பேர் சிவன்மலைக்கு வர உள்ளனர். விழிப்புடன் விழாவை நடத்த வேண்டும். தேர் இழுக்கும்போது, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும், தேர் பின்புறம் இருக்க வேண்டும். தேருக்கு, ஹைட்ராலிக் பிரேக் பொருத்த வேண்டும். தேர் சக்கரத்துக்கு குடில் கட்டை போடும் நபர்கள், கண்டிப்பாக சீருடை அணிய வேண்டும். தேர் வடம், 4 மணிக்கு பிடித்து, 6 மணி வரை தேர் இழுக்க வேண்டும். இரவில் தேர் இழுக்கக்கூடாது. குப்பைகள் உடனுக்கு உடன் அகற்றபட்டு, சுகாதாரமாக இருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றார். கோவில் உதவி ஆணையர் ஆனந்த், செயல் அலுவலர் நந்தகுமார், காங்கேயம் டி.எஸ்.பி., துரைராஜ், யூனியன் தலைவர் கோமதி, இன்ஸ்பெக்டர் பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.