காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மதில் சுவர் சரிந்து விழுந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2013 11:12
காஞ்சிபுரம்: வரதராஜப்பெருமாள் கோவில் தெற்கு மதில் சுவரில் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. சுற்றுலா பயணிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் உலக அளவில் பிரசித்து பெற்று விளங்கி வருகிறது. இந்த கோவில் பெருமாள் சன்னதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. 8ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் ஒரு பகுதியாகவும், 10ம் நூற்றாண்டில் ஒரு பகுதியாகவும், 14ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் இரண்டு ராஜகோபுரமும் கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு சுற்று சுவர் பராமரிப்பு செய்யப்படாமல் இருந்ததால் சரிந்து விழுந்தது.
எல்லாமே 24: வரதராஜப்பெருமாள் கோவில் மொத்த பரப்பளவு 24 ஏக்கர் கொண்டது, அங்கு உள்ள மூலவர் சன்னதிக்கு செல்லும் மலையின் படிக்கட்டு 24, கோவிலை சுற்றியுள்ள மதிர் சுவர் 24 அடி உயரம் கொண்டதாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அங்குள்ள சன்னதிகள் திருப்பணிகள் அனைத்தும் தனியார் பங்களிப்பில் நடந்தது. கிழக்கு ராஜ கோபுரம் மட்டும் அரசு நிதியில் 80 லட்சம் ரூபாய் செலவில் கதவு உட்பட சீரமைக்கப்பட்டது.
மூன்றாண்டுகளுக்கு முன்: கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் வடக்கு மதில் சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தது பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அதை மட்டும் பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள சுவர்களும் இடிந்து விழும் நிலையில் இருப்பதை கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்தது.
திடீர் சரிவு: கடந்த நான்காம் தேதி கிழக்கு ராஜ கோபுர கலசம் இரண்டு மாயமானது. அதற்கிடையில் தெற்கு மதில் சுவர் நேற்று இரவு திடீரென சரிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் பாதிப்பில்லை. சுவர் இடிந்து விழும் சிறிது நேரத்திற்கு முன்தான் அந்த இடத்தில் சுற்றுலா பயணிகள் பேருந்துசென்றது. அதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
பரபரப்பு: எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த கோவில், சுவர் இடிந்து விழுந்ததும் சப்தம் கேட்டு ஓட்டம் பிடித்தனர். இனியாவது மற்ற பகுதிகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழாதவாறு நிர்வாகம் பார்த்து கொள்ள வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.