பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, பன்னிருவகை அபிஷேகங்கள் நடந்தன. இதை தொடர்ந்து சோமஸ்கந்தருக்கும், சிவகாமி அம்மனுக்கு சிவாச்சாரியர்கள் திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். விழாவையொட்டி, அதிகாலை திருவெம்பாவை பாராயணம், அபிஷேக ஆராதணைகள் நடந்தன. பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உற்சவ மூர்த்திகளான அருள்மிகு நடராஜர், அம்பாள், சுந்தரமூர்த்தி நாயனார் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.பின், சிவனுக்காக அம்பாளிடம் சுந்தரமூர்த்தி நாயனார் தூது செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பின் சமாதானம் அடைந்த நடராஜர், அம்பாள் கனகசபையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.