பதிவு செய்த நாள்
23
டிச
2013
11:12
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையம் புனித, 13ம் சிங்கராயர் கிறிஸ்துவ ஆலயம் மற்றும், 65 அடி உயர ஏசுகிறிஸ்து திருவுருவச்சிலை திறப்பு விழா, வெகு விமரிசையாக நடந்தது. வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், பழமையான புனித சிங்கராயர் தேவாலயம் மற்றும் செபஸ்தியார் திருத்தலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அக்கோவில் முகப்பில், வாழப்பாடி ரியல் எஸ்டேட் அதிபரும், முன்னாள் கவுன்சிலருமான லாசர் குடும்பத்தாரின் சார்பில், 20 லட்சம் ரூபாய் செலவில், 65 அடி உயரத்தில், ஏசுகிறிஸ்து திருவுருவ, "ஃபைபர் சிலை தத்ரூபமாக நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா, நேற்று முன்தினம் காலை வெகுவிமரிசையாக நடந்தது. வாழப்பாடி லாசர் வரவேற்றார். சேலம் மறை மாவட்ட பேராயர் சிங்கராயன் தலைமையில், மாவட்ட முதன்மை குரு பிலவேந்திரன், வாழப்பாடி பங்குதந்தை குருசடிசகாயராஜ் மற்றும் மத குருக்கள் சிறப்பு திருப்பலி அர்ச்சிப்பு பூஜை நடத்தி, தேவாலயம் மற்றும் ஏசுகிறிஸ்து திருவுருவத்தை திறந்து வைத்தனர். அந்த சிறப்பு திருப்பலி பூஜை வழிபாட்டில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் வைத்திலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.