பதிவு செய்த நாள்
24
டிச
2013
11:12
கரூர்: இன்று முதல் மஹாமேரு பிரஸ்த அதர்வசீர்ஷ கணபதி ஹோமம், ஏக தின லட்சார்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கரூர் பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், டிரஸ்ட் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். சங்க தலைவர் கனகசபாபதி, செயலாளர் மோகன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் நிர்வாகிகள் கூறியதாவது: கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கனகதாரா மகாலட்சுமி ஹோமம் இன்று ஐய்யபன் கோவில் அருகில் கொடியேற்றத்துடன் துவக்குகிறது. மாலை, 6 மணிக்கு, 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை விக்னேஷ்வர பூஜையுடன் மகாமேரு பிரஸ்த அதர்வசீர்ஷ சகஸ்ர கணபதி ஹோமம் நடக்கிறது. இதற்காக, 8 அடி உயரம், 18 அடி ஆழத்தில் மஹாமேரு வடிவமைப்பு செய்து, அதில் 1,008 கலசம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. நாடு செழிக்கவும், மழைவேண்டியும் கூட்டு வழிபாடு செய்யப்படுகிறது. வரும், 26ம் தேதி காலை அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் கொண்டுவரப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. அதன்பின், ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும். இரவு பேச்சாளர் ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. வரும், 28ம்தேதி சீதா கல்யாண உற்சவம் நடக்கிறது. ஜனவரி, 1ம்தேதி ஹனுமந்த ஜெயந்தி உற்சவம் நடத்தப்பட இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில் நிர்வாகிகள் சிவசங்கர், மோகன், வெங்கடேஷ், கோபால், ரமணன், பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.