இயேசுவின் வரலாற்றை நறுக்கென அவருடைய சீடர் நால்வர் எழுதியுள்ளனர். அந்நூலுக்கு நற்செய்தி என்று பெயர். மத்தேயு, மாற்கு, லூக்காசு, அருளப்பர் ஆகிய நால்வரும் நற்செய்தியைத் தனித்தனியே எழுதியுள்ளனர். நற்செய்தி நூல் பைபிளின் ஒரு சிறப்பான பகுதி தான். அது நம் ஒவ்வொருவருக்காகவும் எழுதப்பட்டது. இயேசு கிறிஸ்து தாம் யார் என்பதைப் படிப்படியாக, ஆணித்தரமாக எடுத்தியம்பியுள்ளார். அவர் தலைவர், ஆசிரியர், குரு, இறைவாக்கினார். இறைவனால் அனுப்பப்பட்டவர், மேசியா, இறைமகன், இறைவனே அதாவது கடவுளே அவர். நானே உலகின் ஒளி, என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான், உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான், (அரு.8:12). நானே வழியும் உண்மையும் உயிரும் என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை, (அரு.14:6) கடவுள் உங்கள் தந்தையாயிருப்பின் எனக்கு அன்பு செய்வீர்கள்; ஏனென்றால் நான் கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்துள்ளேன், (அரு 8:42) என்கிறார் இயேசு.