யூதமதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களின் புனித இடமாக விளங்குவது ஜெருசலேம். மத்திய தரைக்கடலையும் சாக்கடலையும் பிரிக்கிற வளைவில் இந்நகரம் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைபெற்றுத் திகழ்கிற புண்ணியத்தலம். அமைதி, சாந்தம், சமாதானம் என்று கடவுளை எபிரேய மக்கள் அழைத்தனர். சுமேரிய மொழியில் ஜெரு என்றால் நகரம் . சலேம் என்றால் அமைதி. அமைதியான நகரம் என்பது இதன் பொருள். இந்நகரம் கடவுளால் நிறுவப்பட்டது. ஜெருசலேம் மூன்று பகுதிகளாக உள்ளது. முதற்பகுதி கி.பி.,16ம் நூற்றாண்டில், மன்னர் சுலைமானால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த பழைய நகரம். இப்பகுதி பைபிளில் கூறப்பட்டுள்ள ஜெருசலேமை உள்ளடக்கியுள்ளது. இரண்டாம் பகுதி பழைய நகரின் வடக்கே ஒலிவக்குன்றின் சரிவில் அரேபியர்களின் குடியிருப்புகள் அடங்கியுள்ள இடம். இயேசுகிறிஸ்து அடிக்கடி சென்று போதித்த பெத்தானியா இப்பகுதியில் உள்ளது. மூன்றாவது, பழைய நகரின் மேற்கிலும் தெற்கிலும் ச ஐரோப்பிய அமெரிக்காக் கட்டடக்கலையின் பிரதிபலிப்பைக் கொண்ட கட்டடங்கள் உள்ள யூதர்களின் பகுதி. இங்குள்ள புனித கல்லறை ஆலயம் கிறிஸ்தவர்களின் மிக முக்கிய புண்ணிய இடமாக விளங்குகிறது. பைபிளில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் போதனை, அவரது எழுச்சி, உயிர்த்தெழுதல், விண்ணுலகம் அடைதல் முதலிய முக்கிய நிகழ்ச்சிகள் ஜெருசலேமில் நடைபெற்றதாக கிறிஸ்தவர்கள் பைபிளின் அடிப்படையில் நம்புகின்றனர்.
ஆன்மிக நிகழ்வுகள் நடந்த அநேக இடங்கள் ஜெருசலேமில் உள்ளன. சிலோவாம், பெதத்தா குளங்கள், பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி இயேசுகிறிஸ்து அற்புதங்கள் செய்து காட்டிய இடங்களாகும். சீலோவாம் குளத்தில் இயேசு ஒரு குருடனுக்குப் பார்வை வரும்படி குணமாக்கினார். பைபிளில் யோவான் ஒன்பதாவது அதிகாரத்தில் இந்நிகழ்ச்சி குறிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள தேவாலயங்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றோடு தொடர்புடையன. ஓமரின் தேவாலயம், தாவீதின் கல்லறை ஆகியவை இங்கு உள்ளன. இந்நகரின் வடகிழக்குப் பகுதியில் கெத்சமெனே தோட்டம் உள்ளது. இங்கு காணப்படும் சில மரங்கள் இயேசுவின் காலத்திலிருந்தே இருக்கின்றன. பிலாத்துதான் இயேசுவைப் பிடித்து நியாயம் விசாரித்தவன். அவனது மண்டபம் இங்குள்ளது. இவ்வூரின் வடகிழக்கில் கல்வாரி மலை இருக்கிறது. இங்கு தான் இயேசுவை சிலுவையில் அறைந்தனர். கல்வாரி மலை அருகிலுள்ள கல்லறை தோட்டத்தில் இயேசுவை அடக்கம் பண்ணிய கல்லறை உள்ளது. இங்கு தான் இயேசு உயிர்த்தெழவும் செய்தார். இயேசு கிறிஸ்து அவருடைய சீடர்களோடு திருவிருந்தில் (ராப்போஜனம்) பங்கேற்ற இடத்தை மேல்வீட்டறை என்கின்றனர். பைபிளில் கூறப்பட்டிருக்கும் மிகப் பழமையான அநேக இடங்கள் இன்றும் ஜெருசலேமில் உள்ளன. -எல்.பிரைட், தேவகோட்டை