பிப்லியா என்ற கிரேக்க வார்த்தையே பைபிள் என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தமிழில் வேதாகமம் என்பர். பிப்லியா என்றால் புத்தகம் அல்லது பத்திரம் என்று பொருள். பத்திரம் போல் பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகம் என்ற பொருளில் இதைச் சூட்டியிருக்க வேண்டும். பைபிளை எழுதி முடிக்க 1200 ஆண்டுகள் ஆயின. வெவ்வேறு காலங்களில் 40 பேர் இதை எழுதியுள்ளனர். இதில் பலரது பெயர் கூட தெரியவில்லை. இதை பழைய, புதிய ஏற்பாடு என இரண்டாகப் பிரித்தனர். இரண்டிலும் 1189 அதிகாரங்களும், 31ஆயிரத்து 102 வசனங்களும் உள்ளன. பைபிள் புத்தகத்தில் ஆரம்பத்தில் வசனங்கள் பிரிக்கப்படவில்லை. கி.பி.1250ல் முதன் முதலாக வசனங்களாகப் பிரித்து எண் கொடுத்தனர். கார்டினால் ஹ்யூகோ என்பவர், லத்தீன் மொழி பைபிளில் இந்தப் பணியைச்செய்தார். இதையடுத்து 1553ல் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டன. கிரேக்க மொழியில் அதிகாரங்களைப் பிரித்தவர் ராபர்ட் ஸ்டீபன் என்ற அறிஞர்.உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் பைபிள் மட்டுமே. 1685 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு பேசும் மொழியில் கூட பைபிள் உண்டு. உலகில் மிக அதிகமாக விற்பனையாவதும் பைபிள் தான். அது மட்டுமல்ல! செய்திகள் புத்தக வடிவில் வெளியான போது, முதன் முதலாக வெளியானதும் பைபிளே. முதன் முதலாக வெளியான பைபிள் புத்தகம், நியூயார்க்கில் உள்ள பொது இறையியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. பைபிள் முதன்முதலாக பலராலும் கையால் எழுதப்பட்டது. பைபிளுக்கு மட்டும் 24000 கையெழுத்து பிரதிகள் உள்ளன. இதையடுத்து, ஓமர் எழுதிய இலியட் காப்பியத்திற்கு 643 கையெழுத்து பிரதிகள் கிடைத்தன.