பதிவு செய்த நாள்
26
டிச
2013
11:12
கடலூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடலூர் நகரில் உள்ள, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று முன்தினம், உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் ஏசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் வண்ணமயமான குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், நட்சத்திரங்களை அமைத்து மின்விளக்குகளால் அலங்கரித்தனர். கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு 12:00 மணிக்கு குழந்தை ஏசுவின் சொரூபம் குடிலில் வைக்கப்பட்டது, பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதேப்போன்று, திருப்பாதிரிப்புலியூர் சூசையப்பர் தேவாலயத்தில் பங்குத் தந்தை அந்தோணிசாமி தலைமையில், உதவி பங்குத் தந்தை ஸ்டீபன், ஆன்மிக தந்தை ஜான் உட்பட கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும், சப் ஜெயில் ரோடு தூய எபிபெனி, சொரக்கல்பட்டு அந்தோணியர், பாரதி சாலை ஆற்காடு லூத்தரன் திருச்சபை, செம்மண்டலம் பாவநாசர், நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஆற்காடு லூத்தரன் திருச்சபை உட்பட பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பண்ருட்டி: பனிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில் குடிலில் குழந்தை இயேசு பிறத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நள்ளிரவு 12:00 மணியளவில் கூட்டுப் பாடல்கள், சிறப்பு திருப்பலி நடந்தது. பெங்களூரு அருட்தந்தை ராயப்பன் தலைமை தாங்கினார். பங்குதந்தை மரிய ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார். பங்கு தந்தைகள் லூர்துசாமி, மைக்கேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேப்போன்று, சாத்திப்பட்டு இருதய அன்னை விண்ணேற்பு ஆலயத்திலும் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. சிதம்பரம்: கனக சபை நகர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு வழிபாடு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி வழிப்பாட்டை பங்கு தந்தை சூசை அடிகளார் நடத்தினார். தொடர்ந்து இயேசு கிறிஸ்து குறித்த சொற்பொழிவு நடந்தது. பள்ளிப்படை: பாவ நாசர் ஆலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை, சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு ஆலய சபை குரு மறைதிரு ஜேக்கப் ஜெயராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 9:00 மணிக்கு திருப்பலி வழிபாடு நடந்தது. இதில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து பிறப்பு, வரலாறு குறித்து சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதேப்போன்று அண்ணாமலை நகர் சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கிள்ளை: எம்.ஜி.ஆர்., திட்டு தேவசபையில் கிறிஸ்துமஸ் பாட்டு, துரி ஆராதனை நடந்தது. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தேவசபையில் கிள்ளை, முடசல் ஓடை, பிச்சாவரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்று தேவசபை வந்தனர். பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பாதிரியார் தேவகுமார் தலைமையில் கிறிஸ்துவர்கள் நற்செய்தி, பிரார்த்தனை செய்தனர். சிறுபாக்கம்: மங்களூர் நேசர் சிறுவர் இல்லத்தில், ஒன்றிய சேர்மன் கந்தசாமி தலைமை தாங்கி, ஆதரவற்ற மாணவ, மாணவிகள் 36 பேருக்கு சீருடை வழங்கினார். ஒன்றிய துணைச் சேர்மன் அன்னக்கிளி குணசேகர், ஊராட்சித் தலைவர் அன்பரசு, கூட்டுறவு வங்கித் தலைவர் குமார், நிலவள வங்கி துணைத் தலைவர் விஜயமகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.