பதிவு செய்த நாள்
26
டிச
2013
11:12
கோவை: கோவையில் சர்வ சமய கூட்டமைப்பு சார்பில், மதநல்லிணக்க விழாவாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. உக்கடம் கோட்டை சின்ன பள்ளிவாசலில், மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள் பேசுகையில், ""மக்கள் நலன் பெற, இவ்வுலகில் தன்னை அர்பணித்துக்கொண்டார் இயேசு கிறிஸ்து. ஒவ்வொருவரும் எந்த கடவுளை விரும்பி வழிபடுகின்றனரோ, அந்த வழிபாட்டு முறையை நாம் அனைவரும் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்; அப்போது ஒற்றுமை மேலோங்கும், என்றார். கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசுகையில், ""மதநல்லிணக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் இது போன்ற நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது. இவ்விழாக்கள், கோவையில் தொடர்ந்து நடக்க வேண்டும். அனைத்து மதத்தினரும் இணைந்து, இது போன்ற விழா கொண்டாடுவதில் கிடைக்கும் சந்தோஷம் அளவிட முடியாதது, என்றார். முன்னாள் பிஷப் வில்லியம் மோசஸ் பேசுகையில்,""இயேசு கிறிஸ்து அரண்மனையில் பிறக்கவில்லை. மாட்டுக்கொட்டகையில், எளியவராக பிறந்தார். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுகளை போக்கி, அனைவரையும அரவணைத்தார், என்றார். சிரவை ஆதீனம் குமரகுருபரசுவாமிகள், "சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பின் பஷீர் அகமது, "ரிதம் பெண்கள் சமூக பண்பாட்டு மைய அமைப்பு செயலர் அற்புத பால்ராணி, கோவை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரவேஷ்குமார், ஐக்கிய ஜமாத் செயலாளர்அனீபா, குருத்துவாரா ஜெர்னல்சிங், விவேகானந்தர் பேரவை சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.