பதிவு செய்த நாள்
27
டிச
2013
12:12
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக, ஸ்ரீரங்கத்தின் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கலெக்டர் ஜெயஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீரங்கத்தின் முக்கிய சாலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சி அதிகாரிகளும், பணியாளர்களும் அகற்றி வருகின்றனர். அதன்படி, நேற்று காலை அம்மா மண்டபம் முதல், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி பணியாளர்கள் வந்தனர். ஆனால் அதற்கு முன்னரே அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைக்காரர்கள், தங்களின் ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே எடுத்துக் கொண்டனர். எடுக்க மறுத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். காலை முதல், மதியம் வரை நடந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தில், அம்மா மண்டபம் முதல், ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான, ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு, வரும், 11ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.