பதிவு செய்த நாள்
31
டிச
2013
11:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான ஆதி சொக்கநாதர் கோயில், சன்னதி தெருவில் அமைந்துள்ளது. மூலவர்களாக சொக்கநாதர், மீனாட்சி அம்மன் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். சொக்கநாதர் எதிரே நந்தியும், வளாகத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகப் பெருமான்,பூத வாகனத்தில் போர்க் கோலத்தில் விநாயகர், யானையின்மீது தேவேந்திரன், அண்டரா பரணர், உக்கிர மூர்த்தி, கத்திக்கு பதிலாக கதையுடன் வீரபாகு சிலைகள் உள்ளன. மீனாட்சி அம்மன் எதிரே நந்தி உள்ளது. கோயில் வளாகத்தில் வித்யா கணபதி, நெல்லிமர விநாயகர், லிங்கோத்பவர், , துர்க்கை, வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் எழுந்தருளியுள்ளனர். தினம் காலை 8முதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4முதல் இரவு 8 மணிவரையிலும் கோயில் திறக்கப்பட்டிருக்கும். தினம் 2 காலை பூஜைகள் நடக்கிறது. மஹா சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. கார்த்திகை மாதம் மகாதேவ அஷ்டமியன்று நெல்லி மரத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
தூண்களில் கதையுடன் நின்ற கோலத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரர், பார்வதியை, அக்கியின் நின்று தரிசனம் செய்யும் விநாயகர், முக்குறுணி விநாயகர், கற்பக விருட்ஷ மரத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள பார்வதி, பரமேஸ்வரனை வணக்கிய நிலையில் பெருமாள், பிரம்மா நின்ற கோலத்தில், துவார பாலகர்கள் எழுந்தருளியுள்ளனர். இவை மற்ற கோயில்களில் காண்பதரிது.
கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திரப் பொருளை உபதேசம் செய்தார். அம்பாளின் மடியில் குழந்தையாக இருந்த முருகப்பெருமானும் அந்த மந்திரத்தை கேட்டு விட்டார். பிரணவ மந்திரத்தை குரு முலமாக கற்பதுதான் முறை. தற்செயலாக உபதேசம் கேட்டாலும், அதையம் தவறாகவே கருதிய முருகப் பெருமான், மந்திரத்தை முறையா கற்க வேண்டும் என்ற நோக்கில், அதை உபதேசிக்க வேண்டும்மென வேண்டி, திருப்பரங்குன்றம் வந்து தவமிருந்தார். சிவபெருமான் அவர்முன் தோன்றி காட்சிதந்து பரிகார மந்திரம் அருளினார். அந்த இடமே தற்போது ஆதி சொக்கநாதர் கோயில் அமையப்பெற்று, அங்கு ஆதி சொக்கநாதராக சிவபெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் ஆதி சொக்கநாதரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். மேலும் விபரங்களுக்கு 0452 2482248, 49ல் தொடர்பு கொள்ளலாம்.