பதிவு செய்த நாள்
01
ஜன
2014
11:01
திருப்பதி: திருமலையில், நேற்று மாலை, பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. திருமலை, ஏழுமலையானை தரிசிக்க, புத்தாண்டு தினத்தன்று, தேவஸ்தானம் பக்தர்களுக்கு விதித்த, கட்டுபாட்டுகளை ஊடகங்கள் மூலம், அறிந்த பக்தர்கள், திருமலைக்கு, வருவதை தவிர்த்ததால், நேற்று மாலை, பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அனைத்து தரிசன வழிகளும், பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. நேற்று இரவு வரை, 300 ரூபாய் விரைவு தரிசனத்தில், ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏழுமலையானை தரிசிக்க நேற்று மாலை தர்ம தரிசன பக்தர்களுக்கு, ஐந்து மணி நேரமும், பாதயாத்திரை பக்தர்களுக்கு, மூன்று மணி நேரமும் ஆனது. மேலும், நேற்று மாலை தர்ம தரிசன பக்தர்கள், ஆறு காத்திருப்பு அறைகளிலும், பாதயாத்திரை பக்தர்கள், ஏழு காத்திருப்பு அறைகளிலும் ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர்.
திருமலையை சுற்றி பாதுகாப்பு வளையம்: திருமலை பாதுகாப்பை பலப்படுத்தும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், அதன் பாதுகாப்பை பலப்படுத்த, மாநில பாதுகாப்புத் துறை, புதிய திட்டம் தாயாரித்துள்ளது. அதை, அமல்படுத்த, தேவஸ்தானம், 69 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இப்பணியை கண்காணிக்க, ஆந்திர அரசு, மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இச்சூழலில், புத்தூரில், பயங்கரவாதிகள் கைது, திருமலையில் நடந்த, வனத்துறை அதிகாரிகளின் இரட்டை கொலை, பக்தர்கள் வேடத்தில், திருமலையில் செம்மரக் கூலிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் ஆகிய தொடர் சம்பவங்களால், பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணியை, பாதுகாப்புத் துறை தீவிரப்படுத்தி உள்ளது. திருமலைக்கு செல்லும், நான்கு மலைபாதை வழிகளும், வனப்பகுதி வழியே செல்லும், 10 வழிகளும், பாதுகாப்புத் துறை கீழ், கொண்டு வரப்பட உள்ளன. அப்பகுதியில், ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் கூடிய, சோதனைச் சாவடி, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. திருமலையில் நுழைவோரை கண்காணிக்க, 2,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, உள்வட்ட மற்றும் வெளி வட்ட பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணி, ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்கப்படுகிறது. திருமலையில் நான்கு மாட வீதிகளின் பாதுகாப்பிற்காக, ஏழுமலையான் கோவிலை சுற்றி, அரை கிலோ மீட்டர், முதல்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள், கொண்டு வரப்படுகிறது. வாகன சேவை காண வரும் பக்தர்கள், அங்கு அமைக்கப்படும், மெட்டல் டிடெக்டர் கதவு வழியாக மட்டும், மாட வீதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். திருமலையை சுற்றி, 9 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும், வெளி வட்ட சாலை பகுதியில், சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்க, பாட்டரியால் இயங்கும் வாகனத்தை மட்டும் அனுமதிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.