பதிவு செய்த நாள்
02
ஜன
2014
12:01
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில், புதிதாக கட்டப்பட்டுள்ள, "வின்மின் ஆரோக்கியமாதா தேவாலயத்தில், நள்ளிரவு புத்தாண்டு, சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா தேவாலயத்தில், புத்தாண்டு வழிபாட்டில் பங்கற்க, ஏராளமான பக்தர்கள் வின்மின் தேவலயத்தில் குவிந்திருந்தனர். தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி முதல், 11.45 மணி வரை, பங்கு பாதிரியார் ஆரோக்கிய தாஸ் தலைமையில் மறையுரையும், 2014 ம் ஆண்டை வரவேற்க இரவு, 11:45 மணிக்கு, தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலியும் நடந்தது. இரவு 12 மணிக்கு புத்தாண்டுக்கு, தேவாலயம் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அறிவிக்கப்பட்டது. புத்தாண்டையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு, தேவாலயத்தில் பாதிரியார் மைக்கேல் தலைமையிலும், எட்டு மணிக்கு பங்கு பாதிரியார் ஆரோக்கியதாஸ் தலைமையிலும் தமிழில் பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தேவாலயத்தின் மேல் மற்றும் கீழ்கோவில்களில் தமிழ்,ஆங்கிலம், தெலுங்கு, இந்தி,கொங்கணி,மலையாளம் ஆகிய மொழிகளில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.