பதிவு செய்த நாள்
07
ஜன
2014
11:01
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி விழாவில், பக்தர்களுக்கு வழங்க, ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி வரும் 10ல் துவங்குகிறது; விருப்பமுள்ளவர்கள் பங்கேற்க, ஸ்ரீவாரி டிரஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது. இதன் துணை தலைவர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், வரும் 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற உள்ளது. அன்று காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, இரவு வரை, பக்தர்கள், சொர்க்க வாசலை கடந்து வர உள்ளனர். சொர்க்க வாசலை கடந்து வரும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி டிரஸ்ட் பக்தர்கள் குழு சார்பில், லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது.இதை முன்னிட்டு, ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி, பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள, காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், வரும் 10ம் தேதி காலை துவங்குகிறது. பிரசாதம் தயாரிப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள பக்தர்கள் பங்கேற்கலாம். லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணியில், திருப்பூர் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 60 சமையல் கலைஞர்களும், திருமலை திருப்பதிக்கு, ஸ்ரீவாரி சேவைக்கு செல்லும் பக்தர்கள் குழுவும் ஈடுபடுகிறது, என்று தெரிவித்துள்ளார்.