பதிவு செய்த நாள்
07
ஜன
2014
11:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா ஜன., 16ல் கோலாகலமாக நடக்கிறது. கோயில் இணை ஆணையர் பொ.ஜெயராமன் கூறியதாவது: கோயிலுக்கு பாத்தியமான மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஜன., 16 காலை 10.05 மணிக்கு மேல் காலை 10.29 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனும், சுவாமியும் தெப்பத்திற்கு எழுந்தருளி காலை இரு முறையும், இரவு 8 மணிக்கு ஒரு முறையும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிப்பர். மாலை 5 மணிக்கு மைய மண்டபத்தில் பக்தியுலாத்துதல், இரவு 10 மணிக்குள் சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்மன் வெள்ளி அவதா தொட்டிலிலும் எழுந்தருள்வர். உற்சவத்தில் நடக்கும் மண்டகப்படி, திருக்கண்களில் அம்மன் சுவாமிக்கு புதுப்பட்டு, இமிபட்டு மற்றும் கோரா பரிவட்டங்கள் சாத்துபடி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. மண்டகப்படிதாரர்கள் அசல்பட்டு பரிவட்டம் வாங்கி, ஒருநாள் முன்னதாகவே கோயில் உள்துறை கண்காணிப்பாளரிடம் காண்பித்து ஒப்புக்கொண்டதன் பேரில், சுவாமியை மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்படும். திருக்கண் மண்டபங்களில் மாலை, பரிவட்டம் சாத்துப்படி செய்ய பதிவுக் கட்டணம், எண்ணெய்க் கட்டணம் ஆகியவற்றை முன்னதாக கொடுத்து ரசீது பெற்று கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.