பதிவு செய்த நாள்
08
ஜன
2014
11:01
திருப்பதி: திருமலையில், இடித்து தரைமட்டமாக்கப்பட்ட, ஆயிரம் கால் மண்டபத்தை, திருப்பதி அருகேயுள்ள, ஸ்ரீனிவாசமங்காபுரத்தில், நுாறு கால் மண்டபமாக நிர்மாணிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருமலை ஏழுமலையான் கோவில் எதிரில், 15ம், நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஆயிரம் கால் மண்டபத்தை, 2003ல், திருமலையின் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேவஸ்தானம் அகற்றியது.
ஐகோர்ட் உத்தரவு: இதை எதிர்த்து, சில சங்கங்கள், ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில், ஆயிரம் கால் மண்டபம் இருந்த இடத்தில், நுாறு கால் மண்டபம் கட்ட வேண்டும் என, தேவஸ்தானத்திற்கு, ஐகோர்ட், உத்தரவிட்டது. அதன்படி, ஆயிரம் கால் மண்டபத்தில், அகற்றப்பட்ட கல் துாண்களை கொண்டு, 2009ம் ஆண்டு, நுாறு கால் மண்டபம் கட்டும் பணியை தேவஸ்தானம் துவங்கியது. ஆனால், பணிகள் துவங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்டன.இந்நிலையில், மண்டபம் அமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு, நேற்று முன்தினம், திருமலைக்கு வந்து, இடிக்கப்பட்ட ஆயிரம் கால் மண்டபம் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்தது.
அழியும் அபாயம்: பின், அந்த குழுவினர் கூறியதாவது:தற்போதைய நிலையில், பாதுகாப்பு காரணங்களால், பழைய இடத்தில் மண்டபத்தை அமைப்பது இயலாத செயல். இங்கு மண்டபத்தை அமைத்தால், தேவையான பராமரிப்பு இல்லாமல், மண்டபம் அழிந்து விடும் அபாயம் உள்ளது.எனவே, திருப்பதியிலிருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ள, ஸ்ரீனிவாசமங்காபுரம், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.