பதிவு செய்த நாள்
08
ஜன
2014
11:01
கோபிசெட்டிபாளையம்: கோபி, பாரியூர் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, நாளை நடக்கிறது. ஏழு டி.எஸ்.பி.,கள் தலைமையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 400 போலீஸார் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த, 300 போலீஸார், 100 ஊர் காவல் படையினர், 100 தன்னார்வ தொண்டர்கள், இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோபி டி.எஸ்.பி., ராமசாமி கூறியதாவது: திருடர்களை கண்காணிக்க சாதாரண உடையில் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில் வளாகத்தில், பல இடங்களில் கேமரா அமைக்கப்பட்டு, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குண்டம் இறங்க வரும் பக்தர்கள் எவ்வித சிரமுமின்றி செல்ல, தனித்தனியாக வரிசை அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு, போலீஸார் நியமிக்கப்பட உள்ளனர். குண்டம் இறங்க வரும் பக்தர்கள், போலீஸாருடன் ஒத்துழைத்து, வரிசையாக சென்று குண்டம் இறங்க வேண்டும். கோவில் உள் பிரகாத்தில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். 12 வயதுக்கு குறைவான குழந்தைகள், பாதுகாப்பு கருதி கண்டிப்பாக, காலை, 8 மணிக்கு முன் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். குண்டத்தில் காசு, காணிக்கை பொருட்கள் எதையும் போடாமல் ஒத்துழைக்க வேண்டும். இன்று மதியம் முதல், கோபியில் இருந்து அந்தியூர் செல்லும் பஸ்கள், வெள்ளாளபாளையம் பிரிவில் இருந்து வெள்ளாளபாளையம், தொட்டிபாளையம் வழியாக அந்தியூர் செல்லும். அந்தியூரில் இருந்து கோபி வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் புதுக்கரைபுதூர் பிரிவில் இருந்து பொலவகாளிபாளையம் நால்ரோடு, ஈரோடு மெயி ன் ரோடு வழியாக கோபி வரும். கோவிலுக்கு செல்லும் விழா பஸ்கள் அனைத்தும், பாரியூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு நேரிடையாக செல்லும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தியூரில் இருந்து வரும் வாகனங்கள், பாரியூர் முன்புறம், அந்தியூர் சாலையில் தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டு, நிறுத்தி வைக்கப்படும். பக்தர்கள் எக்காரணத்தை கொண்டும், சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்த கூடாது. அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும், என்றார்.