பதிவு செய்த நாள்
16
ஜன
2014
11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நந்தியம் பெருமான், பொங்கல் விழாவை முன்னிட்டு, 108 வகையான மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவண்ணாமலையில், மாட்டு பொங்கலை முன்னிட்டு, அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் ஆகியோர், சூரிய உதயத்தின் போது சூரிய பகவானுக்கும், நந்தியம் பெருமானுக்கும், ஒரே நேரத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதனைமுன்னிட்டு, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவிலில், தங்க கொடி மரத்தின் அருகே உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபத்தில் அருகே உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவானுக்குக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 108 வகையான மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஆப்பிள், வாழைப்பழம், பழம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட பழங்களும், அதிரசம், முருக்கு, சீடை உள்ளிட்ட பலகாரம், கத்திரிக்காய், முருங்கை, அவரை, வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், முல்லை, ரோஜா, மல்லி, உள்ளிட்ட மலர் மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற, 108 வகையான பொருட்களால் செய்யப்பட்ட மாலைகளால், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, சூரிய உதயத்தின் போது, அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சூரிய பகவானுக்கும், நந்தி பகவானுக்கும் நேரடியாக வந்து காட்சி அளித்து, அருள் பாலித்தனர். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமிகளை வழிபட்டனர். மேலும், அண்ணாமலையார் கோவிலில் உள்ள கோசாலையில் உள்ள மாடுகளை அலங்கரித்து, அவற்றுக்கு பொங்கல் படையல் வழங்கப்பட்டது.