பதிவு செய்த நாள்
20
ஜன
2014
11:01
தஞ்சாவூர்: திருவையாறு ஆராதனை விழா பந்தலில், மூன்றாம் நாளாக நேற்றும் கலைஞர்கள் திரண்டு, இசை விருந்து படைத்தனர். தஞ்சையை அடுத்த திருவையாறில் சற்குரு தியாகராஜர் ஆராதனை விழா கடந்த, 17ம் தேதி துவங்கியது. தொடர்ந்து பிரபல இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்று இசை விருந்து படைத்து வருகின்றனர். முதல் நாளில் துவக்க விழா முடிந்ததும் இரவு, 7 மணிக்கு துவங்கி, 12 குழுவினர் இசை அஞ்சலி செலுத்தினர். நாதஸ்வரம், தவில், மிருதங்கம், கடம், மோர்சிங் என, பலவகை கருவிகளை இசைத்தும், தியாகராஜர் கீர்த்தனைகளை பாடியும், இசைப் புலமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, 2ம் நாள், 62 குழுவினர் பங்கேற்று, காலை, 9 மணி முதல், இரவு, 11 மணி வரை, இசை விருந்து படைத்தனர். இதையடுத்து, 3ம் நாளான நேற்றும் காலை, 9 மணிக்கு துரை வெங்கடேசன், செந்தில் நாதஸ்வரத்துடனும், மணிகண்டன், ராஜா தவிலுடனும் நிகழ்ச்சி துவங்கியது. இரவு, 11 மணி வரை, 60 குழுவினர் பங்கேற்றனர்.