பதிவு செய்த நாள்
22
ஜன
2014
11:01
சேலம்: சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உண்டியல் திறக்கப்பட்டதில், 5.88 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. சேலம், கோட்டையில், அழகிரிநாத ஸ்வாமி கோவில் உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்கள் காணிக்கை போடும் வகையில், தற்காலிகமாக நான்கு உண்டியல்கள், இரண்டு டிரம்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த உண்டியல்கள், நேற்று காலை திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. ஓம் ஸ்ரீமன் நாராயண சேவா டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள் மற்றும் பக்தர்கள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமு, ஆய்வாளர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. உண்டியல் வசூல் குறித்து, செயல் அலுவலர் முருகன் கூறியதாவது: சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், நிரந்தரமாக, ஐந்து உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியலில் உள்ள காணிக்கை, மூன்று மாதத்துக்கு, ஒருமுறை எண்ணப்படும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தற்காலிகமாக கோவிலை சுற்றி, நான்கு உண்டியல்களும், இரண்டு டிரம்களும் வைக்கப்பட்டன. கோவிலுக்கு வந்த பக்தர்கள், உண்டியல்களிலும், டிரம்களிலும் காணிக்கைகளை செலுத்தினர். காணிக்கைகளை எண்ணும் பணியில், 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியல்களின் மூலம் மொத்தம், ஐந்து லட்சத்து, 88 ஆயிரத்து, 688 ரூபாய் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வந்துள்ளது. தவிர, இரண்டு கிராம் தங்கம், 30 கிராம் வெள்ளி, 10 டாலர் ஆகியவையும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். கடந்தாண்டை விட, இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி காணிக்கை, 72, 021 ரூபாய் குறைவாகவே உள்ளது. இந்தாண்டு பொங்கலை ஒட்டி வைகுண்ட ஏகாதசி வந்து விட்டதால், பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதனால், உண்டியல் காணிக்கையும் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.