பதிவு செய்த நாள்
24
ஜன
2014
11:01
திருப்பூர்: இந்திய கலாசாரத்தின் அடித்தளமான ஆன்மிகம், நம்மை கட்டிக் காக்கிறது, என, பாரதிய வித்யாபவன் கோவை மைய தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார். விவேகானந்த சேவாலயம் சார்பில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா, திருப்பூர் வேலாயுதசாமி மண்டபத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது. நேற்று, விவேகானந்த தியானம் "சிடி வெளியீட்டு விழா நடந்தது. பாரதிய வித்யா பவன் கோவை மைய தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது: மனதை வசப்படுத்தினால், எதையும் சாதிக்க முடியும்; அது, சாதாரணமல்ல. பிரபஞ்சம் கைக்குள் வர, மனம் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். உலகத்துக்கு தேவையான ஒளி, மனிதனிடம் இருக்கிறது. அது தெரியாமல் அறியாமையில் வாழ்கிறோம். மனிதன் விழிக்க வேண்டும்; வாழ்வில் உயர வேண்டும்; உலகுக்கு ஒளி வழங்க வேண்டும். அதற்கு ஞானஒளி என்று பெயர். பாரதியும். விவேகானந்தரும் ஒன்றுபோல் சிந்தித்தனர்; விவேகானந்தரின் பக்தராக பாரதி இருந்தார். வாழ்க்கையில் அவர்கள் ஒருமுறையாவது சந்தித்திருந்தால், அது சரித்திரமாகி இருக்கும்; இருவரும் சந்திக்காதது, சரித்திர பிழையாகி விட்டது. ஆன்மிக கலாசாரத்தை, பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருந்தால், இந்தியா எப்போதோ வல்லரசாகி இருக்கும். அப்படி செய்யாததால், மனித ஆற்றலும், அறிவும் முழுமையாக வெளிப்படாமல் போய்விட்டது. அதற்கான சூழலை ஏற்படுத்தாததால், ஆன்மிகத்தின் ஞான ஒளி செயலிழந்து போனது. ஆன்மிகமே இந்திய கலாசாரத்தின் அடித்தளம்; ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், ஆன்மிக கலாசாரமே நம்மை கட்டிக்காக்கிறது. அதை முறையாக பயன்படுத்த தவறி விட்டோம். பக்தி மார்க்கத்தில் ஆன்மிக கருத்துகளை இல்லாததால், கலாசார சீரழிவு ஏற்பட்டது. தன்னையறிதலும், துக்கத்தில் இருப்பவனுக்கு உதவுவதும், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு தருவதும் ஆன்மிகம்; உன்னை உயர்த்திக் கொண்டு, சமுதாயத்தை உயர்த்துவதே, ஆன்மிகம். இவ்வாறு, கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார். விவேகானந்த சேவாலயம் தலைவர் செந்தில்நாதன் வரவேற்றார். விவேகானந்த தியானம் "சிடியை கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, "சண்முகவேல் குரூப் ஆப் மில்ஸ் இயக்குனர் சரவணசுதன், டாக்டர் மரகதம் பெற்றுக்கொண்டனர். கேரளா ஹரிபாட் ராமகிருஷ்ணா மடம் தலைவர் வீரபத்ரானந்தஜி மஹராஜ், விவேகானந்த தியானம், "சிடியை அறிமுகப்படுத்தி பேசினார். விவேகானந்தரின் சிந்தனை குறித்து, பார்வையற்ற மாணவன் சபரிவெங்கட் பேசியது, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. விவேகானந்த சேவாலயம் பொறுப்பாளர் ரங்கராஜன் நன்றி கூறினார்.