காஞ்சிபுரம்: கோட்டை மாரியம்மன், அடைஞ்சியம்மன் கோவில் மைலார் திருவிழாவில், காப்பு கட்டிய பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அலகு குத்தி, நேர்த்திக்கடனை செலுத்தினர். முசரவாக்கம் கிராமத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் அடைஞ்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தை மாதம் மைலார் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில், கோட்டை மாரியம்மன் மற்றும் அடைஞ்சியம்மன் மலர் அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். தொடர்ந்து, மந்தவெளி பகுதியில் உள்ள உற்சவ மண்டப மேடையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காப்புக்கட்டி விரதமிருந்த, பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும், கயிற்றில் தொங்கியவாறு அம்மனுக்கு மாலை செலுத்தியும் அம்மனை வழிபட்டனர்.