பதிவு செய்த நாள்
04
பிப்
2014
11:02
சேலம்: சேலத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சேலத்தை சேர்ந்த ராமானுஜம் என்பவர், கணக்கர் தெரு, 15ம் எண்ணில் உள்ள கட்டிடத்தை வாடகைக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தில், செலவுகள் போக மீதி தொகையில், கோவில்களுக்கு செலவு செய்ய வேண்டும், என்று உயில் எழுதி வைத்துள்ளார். அதன்படி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மார்கழி மாத பகல் பத்து உற்சவம், சேலம், சின்ன திருப்பதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் ரதோற்சவம், ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகாரர் ஸ்வாமி கோவில ரத சப்தமி உற்சவம், சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் ராமநவமி, ஒன்பதாம் நாள் உற்சவம் நடத்த வேண்டும். ஆனால், எந்த கோவில்களிலும் உற்சவங்கள் நடைபெறவில்லை. இதையடுத்து, திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் மற்றும் ஹிந்துசமய அறநிலையத்துறை இயக்குனருக்கு மனு அளித்தார். அரசின் உத்தரவின்படி, சேலம் ஆர்.டி.ஓ., சதீஷ், ஹிந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கோவிலுக்கு சொந்தமான இடத்தை நேற்று ஆய்வு செய்தனர்.