பதிவு செய்த நாள்
07
மார்
2014
11:03
சென்னிமலை: காங்கேயம் அடுத்த சிவன்மலை, சுப்பிர மணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவுப்படி, சர்க்கரை வைத்து பூஜை செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் முருகன், பக்தர்கள் கனவில் வந்து, குறிப்பிட்ட பொருளை, கோவிலில் வைத்து பூஜை செய்ய, உத்தரவு இடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கொடுக்கும் அப்பொருள், பல்வேறு சோதனைக்கு பின், கோவில் நுழைவு வாயில் முன் உள்ள, கண்ணாடி பேழையில் வைத்து, தினமும் பூஜை செய்யப்படும். கடந்தாண்டுகளில், ஆண்டவன் உத்தரவுப்படி, ஆற்று நீர் வைத்து பூஜை செய்தபோது, சுனாமி வந்தது. முல்லை பெரியாறு அணை பிரச்னை எழுந்தது. கடந்த மாதம், அரிசி வைத்தபோது, மத்திய அரசு, அரிசிக்கு, 12.50 சதவீதம், சேவை வரியை விதித்தது. தற்போது, காங்கேயம் அருகே, ராஜசேகர் என்பவர் மனைவி மோகனவள்ளி கனவில், முருகன் தோன்றி, சர்க்கரை வைத்து, பூஜை செய்ய உத்தரவு இட்டு உள்ளார். நேற்று முன்தினம் காலை, மோகனவள்ளி, தன் கணவருடன், சிவன்மலை கோவிலுக்கு வந்து, விவரத்தை தெரிவித்தார். பல்வேறு சோதனைக்குப் பின், ஆண்டவன் உத்தரவு கண்ணாடி பேழையில் வைத்து, பூஜை செய்யப்படுகிறது. இதையடுத்து, கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில், கரும்புக்கு விலை உயர்வு ஏற்படலாம் என, பக்தர்கள் கருதுகின்றனர்.