பதிவு செய்த நாள்
20
மார்
2014
12:03
பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, நேற்று அம்மனுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 9ல், கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெற்றது. மார்ச் 17ல், மின்சார தீப தேரோட்டம் நடந்தது. அன்றிரவு 3 மணிக்கு வான வேடிக்கைகள், மேள, தாளம் முழங்க, அம்மன் "கள்ளர் திருக்கோலத்துடன், புஷ்பபல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். குடம், குடமாக பாலாபிஷேகம்: விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று, பரமக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை 5 மணி முதல் 10 மணி வரை இடைவிடாது பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், வேல் குத்தியும் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். வைகை ஆற்றில் துவங்கிய பால்குட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னர் 11 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள், திரவியப் பொடி, சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பால் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் நடந்தது. இரவு அம்மன் புஷ்பபல்லக்கில் சயன கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.