பதிவு செய்த நாள்
02
ஏப்
2014
10:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் எப்போதும் வற்றாத தெப்பக்குளம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறது. வற்றிய குளத்தில் குவிந்திருக்கும் கழிவுகளை அகற்றி, இடிந்து போன மண்டபத்தை புனரமைத்து, குளத்திற்கு தண்ணீர் வர பழமையான பாதாள சாக்கடையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலூர் மலையமாநாட்டின் தலைநகரம், வைணவம், சைவம் இரண்டும் தழைத்தோங்கிய ஊர். நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் உலகளந்த பெருமாள், கோவில் கொண்ட நகரம். இந்த நகரம் தற்போது ஆக்கிரமிப்புகளால் பொலிவிழந்து வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. பெருமாள் கோவிலை சுற்றி, சுவாமி வீதியுலா வர வானமாமலை வீதிகள், தேர் வலம் வர நான்கு மாட வீதிகளுடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. வற்றாத ஜீவநதியான தென்பெண்ணையை ஒட்டி திருக் கோவிலூர் நகரம் அமைந்துள்ளது. வறட்சி காலங்களில் ஊரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிக்க தீர்த்தகுளம், தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது. இதற்காக நகரின் தென்மேற்கே உள்ள பெரிய ஏரியில் இருந்து பாதாள கால்வாய் அமைத்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இவையெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டவை.
ஆக்கிரமிப்பு: மன்னராட்சி முடிந்து, மக்களாட்சி துவங்கியதும் சட்டத்தை கையில் எடுத்த சுயநல சக்திகள் கோவில் இடங்களை ஆக்கிரமிக்கத் துவங்கின. பாதாள கால்வாய் சென்ற பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டது. எனினும் பாதாள கால்வாய் மூலம் குளத்திற்கு சீராக தண்ணீர் வந்தது. விழுப்புரம் கலெக்டராக கோபால் இருந்த போது, அவர் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்ந்து போன பாதாள கால்வாய் சீரமைத்து குளத்திற்கு தண்ணீர் தடையின்றி கொண்டு வரப்பட்டது.
வரண்டது:கடந்த ஆண்டு ஏரியில் இருந்து பாதாள கால்வாய் வழியாக குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் முற்றிலும் அடைப்பு ஏற்பட்டது. இதனால் குளம் தண்ணீரின்றி வறண்டு போய் உள்ளது. பருவ மழை பொய்த்து போன நிலையில் குளம் வற்றிக் கிடப்பதால் நகரில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றும் நிலை உருவெடுத்துள்ளது. வறட்சியை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட நகரம் சுயநலசக்திகள் ஆக்கிரமிப்பால் பொலிவை இழந்து, புராதன அந்தஸ்தை இழந்து தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுப்பிக்க வேண்டும்: புராதான நகரமாக அறிவித்திருக்கும் தமிழக அரசு, அறிவிப்போடு நிற்காமல் வற்றிய குளத்தில் குவிந்திருக்கும் கழிவுகளை அகற்றி, குளத்தின் மையத்தில் இடிந்து போன மண்டபத்தை புனரமைத்து, குளத்திற்கு தண்ணீர்வர பழமையான பாதாள சாக்கடையை புதுப்பிக்க வேண்டும்.