திருவள்ளூர்: திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, கடந்த, 24ம் தேதி துவங்கியது. தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் தீர்த்தீஸ்வரர் வீதிஉலா வந்தார். நேற்று முன்தினம் காலை பிச்சாடனர் உற்சவமும், மாலை திருக்கல்யாண உற்சவமும், அதன் பின், குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலாவும் நடந்தது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் மலர் அலங்காரத்துடன் வீற்றிருக்க, ஏராளமான பக்தர்கள் திருமண காட்சியை தரிசித்தனர். நாளை, காலை மகா அபிஷேகத்துடன் பங்குனி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.