பதிவு செய்த நாள்
03
ஏப்
2014
11:04
உடுமலை : மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பாரம்பரியமாக குட்டை திடலில் நடத்தப்படும் பரிவேட்டை மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலையில், பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில், பொள்ளாச்சி ரோட்டில் உள்ளது. நகரின் பல்வேறு சிறப்பம்சங்களில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவும் ஒன்றாகும். பாரம்பரியம் வாய்ந்த கோவில் திருவிழாவில், பல்வேறு நிகழ்ச்சிகள் பழமை மாறாமல், நடத்தப்படுவது பக்தர்களுக்கு திருப்தியளித்து வந்தது. இதில், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூரைச்சேர்ந்த மக்களும் அதிக ஆர்வத்துடன் பங்கேற்பது குட்டை திடலில் நடக்கும் பரிவேட்டை மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி குட்டைத்திடல் பகுதியில் நடத்த வரலாற்று சிறப்பு மிக்க காரணமுள்ளது. உடுமலை நகரம் வளர்ச்சி பெறும் முன்பு, திருமூர்த்திமலையிலிருந்து வரும் மழை நீர், ஏழு குளங்களில் நிறைந்து, நகரின் மேற்குப்பகுதியிலுள்ள தங்கம்மாள் ஓடை வழியாக உப்பாறு ஓடை நோக்கி சென்று வந்தது. உடுமலை மக்களின் தேவைக்காக தங்கம்மாள் ஓடையிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, குளத்தில் தேக்கி வைக்கப்பட்டது. இந்த இடமே குட்டை திடல் என அழைக்கப்படுகிறது.
தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலம் முதலே பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், நகரின் வாழ்வாதாரமாக இருந்த குட்டைப்பகுதியில் நடத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு உதாரணமாக நகரின் பழமையான குட்டை விநாயகர் கோவில், குட்டை திடல் பகுதியில் உள்ளது. காலப்போக்கில், குட்டை பராமரிக்கப்படாமல், மண் மேடாக மாறியது. இதனால், அப்பகுதி மைதானமாக மாற்றப்பட்டது. இருப்பினும், நகரின் தொன்மையை நினைவு கூறும் வகையில், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, குட்டை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேர், குட்டை திடல் வழியாக தங்கம்மாள் ஓடைக்கு சென்று பின்னர் கோவில் நிலையை அடைகிறது. பின்னர், மாரியம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கும். அப்போது, அலங்கரிக்கப்பட்ட அம்மன், குட்டை திடலில், நடக்கும் வாண வேடிக்கையை பார்த்து விட்டு, செல்லும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு மாரியம்மன் தேர்த்திருவிழாவிற்கு நோன்பு சாட்டப்பட்டுள்ளது. வழக்கமாக பரிவேட்டை நிகழ்ச்சியை குட்டைத்திடலில் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில், வருவாய்த்துறை மற்றும் போலீசில் அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், வருவாய்த்துறை மற்றும் போலீஸ் சார்பில், குட்டைத்திடலில் பரிவேட்டை நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்கப்படவில்லை; மேலும், பொள்ளாச்சி ரோட்டில், மின்மயானம் அருகே உள்ள காலியிடத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் இந்த நடவடிக்கை பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமாக நடத்தப்படும் பரிவேட்டை மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சியில், எவ்வித அசம்பாவிதங்களும் நடந்தது இல்லை. இந்நிலையில், எவ்வித அடிப்படை காரணங்களும் இல்லாமல், ஆன்மிக நிகழ்வை மின்மயானம் அருகே மாற்றுவது பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதிக்க செய்வதாக உள்ளதாக ஆன்மிக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. வழக்கமாக தேர்த்திருவிழா குட்டை திடல் ஏலத்தின் போது, சர்ச்சையை ஏற்படுத்தும் வருவாய்த்துறை இம்முறை பாரம்பரிய வழிபாட்டில் கைவைத்துள்ளது போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.