பதிவு செய்த நாள்
07
ஏப்
2014
10:04
மதுரை: ""ஜூலையில் இந்து சமய மாநாடு பெங்களூருவிலும், ஆகஸ்ட்டில் அகில இந்திய மாநாடு டில்லியிலும் நடத்தப்படும், என மதுரையில் நடந்த அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு, தலைவர் சோமசுந்தர தீட்சித் தலைமை வகித்தார். சுவாமிகண்ணு பட்டர் வரவேற்றார். ஆட்சிக்குழுத் தலைவர் சிவசங்கர சர்மா, மாநில தலைவர் சண்முக சுந்தர பட்டர், டாக்டர் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் ரமேஷ் பேசியதாவது: தமிழகத்தில் கோயில்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் சொந்தமாக 4.75 லட்சத்திற்கு அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன. 22,600 கட்டடங்கள், 33,627 மனைகள் உள்ளன. இவற்றிற்காக நிர்ணயிக்கப்பட்ட மிகக்குறைந்த கட்டணங்கள் கூட கடந்த சில ஆண்டுகளாக வரவில்லை. இது தொடர்பாக அறநிலையத்துறை இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க வேண்டிய இந்த சொத்துக்களில் இருந்து ரூ.65 கோடி மட்டுமே வருவாய் கிடைக்கிறது. அறநிலையத்துறையால் சிவாச்சாரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் நலனுக்காக முக்கிய முடிவுகளை இந்த அமைப்பால் தான் ஏற்படுத்த முடியும், என்றார். "அருந்தமிழ் வளர்த்த ஆதி சவை சிவாச்சாரியார்கள் புத்தகத்தை பிள்ளையார்பட்டி சிவாச்சாரியார் பிச்சை வெளியிட, பேராசியர் சொ.சொ.மீ.மீ. சுந்தரம், சண்முக சுந்தர பட்டர் பெற்றுக் கொண்டனர். தேர்தலில், அ.தி.மு.க., விற்கு ஆதரவு அளித்தல், மற்ற மாநிலங்களில் அந்த சங்கங்களின் தலைவர்கள் முடிவை எடுத்துக் கொள்ளுதல், மழைக்காக வருணஜெபம் நடத்துதல், ஜூலையில் பெங்களூருவில் இந்து சமய மாநாடு, ஆகஸ்டில் டில்லியில் அகில இந்திய இந்து சமய மாநாடு நடத்துதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேவா சங்கம் நிர்வாகிகள் பட்டர்கள் எம்.சி.சுவாமி, செல்வம், சிவாச்சாரியார்கள் சோமசுந்தரம், முத்துக்குமார் மற்றும் கணேசன், கார்த்திகேய சிவம் உட்பட பலர் பங்கேற்றனர். சின்னசாமி பட்டர் நன்றி கூறினார்.