பதிவு செய்த நாள்
08
ஏப்
2014
04:04
தமிழ் ஆண்டுகள் அறுபதில் ஜயஆண்டு 28வதுஆண்டாகும். இந்த ஆண்டில், நல்ல மழை, புன்செய் பயிர் உற்பத்தி பெருக்கம், ஆட்சியாளர்களால் மக்களுக்கு நன்மை, தொழில் அபிவிருத்தி ஆகியவை உண்டாகும் என பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது. ஜய என்றால் வெற்றி. எல்லாவகையிலும் மக்களுக்கு வெற்றியளிக்கும் விதத்தில் ஜய ஆண்டு அமைந்திருக்கும்.
நான்கு கிரகப் பெயர்ச்சி: இந்த ஆண்டில் குரு, சனி, ராகு,கேது ஆகிய நான்குகிரகங்களுமே பெயர்ச்சியாகின்றன. வைகாசி30(ஜூன்13)ல் மிதுனராசியில் இருக்கும் குரு, கடக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். பார்வை பலம் மிக்க குரு, தன் உச்சவீடான கடகத்திற்குச் செல்வதால், குரு பலத்தால் பொதுவாக நன்மையே அதிகரிக்கும். ராகு,கேது ஆனி7ல்(ஜூன்21)ல் பெயர்ச்சியாகின்றன. ராகு துலாமில் இருந்து கன்னிக்கும், கேது மேஷத்தில் இருந்து மீனத்திற்கும் இடம் மாறுகின்றனர். மார்கழி1( டிச.16)ல், துலாம் ராசியில் இருக்கும் சனி, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
இந்தியாவில் என்ன நடக்கும்?: ஜய வருஷத்தின் ராஜாவாக சந்திரன் இருப்பதால், நாட்டில்நிலையான ஆட்சி உண்டாகும். மந்திரியாகவும் சந்திரனே இருப்பதால், பெட்ரோல், டீசல், இருப்பு, சிமென்ட், கம்பி விலை உயரும். சேனாதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சூரியன் இருப்பதால் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். நவீன ஏவுகணைகள் வாங்குவதன் மூலம் ராணுவம் பலப்படும். புதிய ராக்கெட் ஏவப்படும். தான்யாதிபதியாக செவ்வாய் விளங்குவதால் நெல், மொச்சை, கடலை, துவரை, கேழ்வரகு, சோளம் நன்கு விளையும். சனீஸ்வரரின் பலம் காரணமாக, முந்திரி, திராட்சை, கல்கண்டு,சர்க்கரை, சுக்கு, மிளகு, சாம்பிராணி விலையேறும். பசுக்களின் நாயகன் கோபாலன் அருளால் ஆடு, மாடு, கோழி உற்பத்திஅதிகமாகும். புத்தாண்டு திங்கள்கிழமை பிறப்பதால் நல்ல மழைபொழியும். நல்ல மழையால் ஆறு, குளம், அணைகள் நிரம்பிவழியும். சிந்து, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, காவிரி, பாலாறு மற்றும் சில நதிகளில் வெள்ளம் உண்டாகும். மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பான ஆட்சியும், மக்களுக்கு நன்மையும் உண்டாகும்.